Monday, December 26, 2011

இராணுவத் தளபதியும், காவல்துறை மா அதிபரும் ஊடகவியலாளர்களை துரோகிகளாக அறிவித்தனர் – விக்கிலீக்ஸ்!

Monday,December, 26,2011
இலங்கை:முன்னாள் இராணுவத் தளபதியும், முன்னாள் காவல்துறை மா அதிபரும் ஊடகவியலளார்களை துரோகிகளாக அறிவித்தனர் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும், முன்னாள் காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ன ஆகியோர் ஊடகவியலாளர்களை துரோகளாக அறிவித்தனர் என அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு தகவல் அனுப்பி வைத்துள்ளனர்.

குறிப்பாக இலங்கையின் ஊடகவியலாளர்கள் புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு சேiவாற்றி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இராணுவத் தளபதியும், காவல்துறை மா அதிபரும் இந்தக் கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியிருந்தனர்.

2009ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக பாதுகாப்பு விவகார அதிகாரி ஜேம்ஸ் மூர் இந்த தகவல்களை அனுப்பி வைத்துள்ளார்.

புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வரும் ஊடகவியலாளர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராணுவத் தளபதியும், காவல்துறை மா அதிபரும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்களிடமிருந்து இவ்வாறான ஊடகவியலாளர்கள் பற்றிய பட்டியல் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளனர். இதில் அநேகமானவாகள் சிங்களவர்கள் என இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

சிலர் புலிகளுடன் இரகசிய சந்திப்புக்களை பேணியதாக குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறானவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் இராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். பல ஊடகவியலாளர்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வெளிநாட்டுத் தூதுரகங்களிடம் கோரிக்கை விடுத்து வருவதாக ஜேம்ஸ் மூர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊழல் சம்பவமொன்று குறித்த செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட சண்டே லீடர் ஊடகவியலாளர் ருவான் பெத்தியேகொட அண்மையில் தூதரகத்தின் உதவியை நாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் சண்டே லீடர் பிரதம ஆசிரியர் லசந்தவிற்கு நெருக்கமான ருவான், அவுஸ்திரேலிய - இலங்கை இரட்டைக் குடியுரிமை உடையவர் என மூர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் இந்த விடயம் குறித்து தகவல் வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலிய உயாஸ்தானிகராலய அதிகாரி ருவான் நாட்டை விட்டுவெளியேறிச் செல்ல தேவையான உதவிகளை வழங்கியதுடன், விமான நிலையம் வரையில் கொண்டு சேர்த்ததாகத் தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதி மற்றும் காவல்துறை மா அதிபர் ஊடகங்கள் பற்றி வெளியிட்ட கருத்துக்கள் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக பல ஊடகவியலாளர்கள் அமெரிக்கத் தூதரகத்தில் முறைப்பாடு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


குறிப்பாக சில ஊடகவியலாளர்கள் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் என மூர், அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரோசனி அன்டர்சன், போத்தல ஜயந்த மற்றும் லங்காபீலி தர்மசிறி போன்றவர்கள் காவல்துறை மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதியின் அச்சுறுத்தல் குறித்து அமெரிக்கத் தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஊட அச்சுறுத்தல் காரணமாக பல ஊடகவியலாளர்கள் வெளிநாட்டுத் தூதரகங்களின் உதவியை நாடி வருவதாக ஜேம்ஸ் மூர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த நிறைவின் பின்னர் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக ஊடகங்கள் சுயகட்டுப்பாட்டுடன் செய்திகளை வெளியிட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எதிர்க்கட்சி நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் விமர்சனப் பாங்கான ஆசிரியர் தலையங்கங்களை வெளியிட்டு வந்த டெய்லி மிரர், தற்போது அரசாங்கத்திற்கு சார்பான தகவல்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புலனாய்வு செய்திகளை உடனுக்குடன் அச்சமின்றி வெளிப்படுத்தி வந்த சண்டே லீடர் மௌனமான போக்கைக் கடைபிடித்து வருவதாக ஜேம்ஸ் மூர் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment