Sunday, December 11, 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 11, 2011
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நேர்மைத்தன்மை குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களை காலம் தாழ்த்தவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1987ம் ஆண்டின் பின்னர் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்களினால் வழங்கப்பட்ட அரிய சந்தர்ப்பங்களை, தமிழ்த் தலைமைகள் உதாசீனம் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே, தமிழ் மக்களின் அவல நிலைமைகளுக்கு இந்த தமிழ் அரசியல் தலைவர்களே பொறுப்பு சொல்ல வேண்டுமென அமைச்சர் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படக் கூடாது என்ற முனைப்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நடைமுறைச் சாத்தியமானதும், பொருத்தமானதுமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கை மீள இணைப்பதனை விடவும் பல முக்கிய அவசர பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு சகல பிரிவினைகளையும் களைந்து அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் ஒன்றிணைந்து பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment