Sunday, December 11, 2011

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க பிரான்ஸ் ஆதரவாளராகத் திகழ்ந்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது!

Sunday, December 11, 2011
இலங்கை::முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க பிரான்ஸ் ஆதரவாளராகத் திகழ்ந்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம், அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2003ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சந்திரிக்கா, அமெரிக்காவிற்கு எதிரான கொள்கைகளை பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பிரான்ஸூடன் மிக நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதற்கு சந்திரிக்கா கூடுதல் முனைப்பு காட்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவுடன் பேணியளவிற்கு சந்திரிக்கா மிக நெருக்கமான உறவுகளைப் பேணவில்லை என அப்போதைய தூதுவர் ஆஷ்லி வில்ஸ் தெரிவித்துள்ளார்.

சந்திரிக்கா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி கூட்டமைப்பில், கடும்போக்குடைய ஜே.வி.பி கட்சி அங்கம் வகித்தமை அமெரிக்காவுடன் நெருங்கிப் பழகுவதனை தடுத்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

ஈராக் விவகாரம், காலநிலை மாற்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், வடக்கு கிழக்கு விவகாரம் போன்ற விடயங்களில் சந்திரிக்காவின் நிலைப்பாடு அமெரிக்காவுற்கு முழுமையாக சாதகத் தன்மையை வெளிப்படுத்தவில்லை.

சந்திரிக்காவின் பெற்றோர்களும் இலங்கையின் முன்னாள் பிரதமர்களுமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. மற்றும் சிறிமா பண்டாரநாயக்க ஆகியோர் அணிசேரா நாடுகளின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள்.

எனவே சந்திரிக்காவும் முழுமையாக அமெரிக்க ஆதரவு கொள்கைகளை பின்பற்றியதாகக் கருத முடியாது, பெற்றோரின் கொள்கைகளும் இதற்கு ஏதுவாக அமைந்திருக்கலாம் என ஆஷ்லி வில்ஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment