Sunday, December 11, 2011சென்னை:: மனித உரிமை மீறல் சம்பவங்கள், தமிழ்நாட்டில் அதிகளவில் நடக்கிறது என்று உயர் நீதிமன்ற நீதிபதி முருகேசன் தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் சார்பில் மனித உரிமை தினவிழா, சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையிலுள்ள, அதன் வளாகத்தில் நேற்று காலை நடந்தது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முருகேசன், டிஜிபி ராமானுஜம், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் பாஸ்கர், ஜெயந்தி, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பதிவாளர் ஸ்ரீலட்சுமி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீதிபதி முருகேசன் பேசியதாவது:
மக்களுக்கு தேவையான நன்மைகளை அரசு செய்யவில்லை என்றால், அதில் இருந்தே மனித உரிமை மீறல் தொடங்கி விடுகிறது. மனிதனின் அனைத்து அம்சங்களிலும் அவனுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். காவல் துறையினர் அதிக அளவில் மனித உரிமை மீறலில் ஈடுபடுகின்றனர். ஒருவரிடம் வற்புறுத்தி புகார் வாங்குவது, வற்புறுத்தி வாக்குமூலம் வாங்குவது போன்றவை மனித உரிமை மீறல்களாகும்.
தமிழகத்தில் அதிக அளவில் மனித உரிமை மீறல் நடக்கிறது. போலீசார் தாக்கல் செய்யும் தடுப்பு காவலில் 95 சதவீதம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்படுகிறது. அரசு மருத்துவர்கள் கூட மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர். சரி யான நேரத்தில் பணியை முடித்து சென்று விடுகின்றனர். அந்த நேரத்தில் உயிருக்கு போராடுபவர் வந்தாலும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது இல்லை. இதுகூட மனித உரிமை மீறல்தான்.
அனைவரும் தங்களது சுதந்திரத்தை அனுபவித்து, மற்றவர்களின் உரிமையில் தலையிடாதவாறு நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதி முருகேசன் பேசினார்.
No comments:
Post a Comment