Saturday, December 31, 2011

ஆங்கில புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து!

Saturday,December,31,2011
சென்னை::ஆங்கில புத்தாண்டையொட்டி கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவர்னர் ரோசய்யா: அனைவருக்கும் எனது இதயபூர்வமான புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும், இந்த புத்தாண்டில் அமைதியுடனும், நல்ல வளத்துடனும் மக்கள் வாழ வேண்டும். இந்தியா மேன்மையடைய வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா: புதுப்பொலிவுடன் புத்தாண்டு பிறக்கின்ற இந்த இனிய நன்னாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழ வேண்டும் என்ற உன்னத, உயரிய லட்சியத்தை அடைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உங்கள் சகோதரியின் தலைமையிலான தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வரும் வேளை இது. சீர்மிகு திட்டங்கள் ஏற்றம் பெறவும், ஏழ்மை நிலை அகன்றிடவும் தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலத்திட்டங்களின் பயன்களை உரியவர் அனைவரும் பெற்றிட வேண்டும்.

திமுக தலைவர் கருணாநிதி: ஆட்சியாளர்களின் அடக்கு முறை போக்குகள் மாறிட வேண்டும். ஏழை, எளியோர் நலம் பெற திமுக ஆட்சி தொடங்கிய திட்டங்கள் துலங்கிட வேண்டும்; மின்சார தட்டுப்பாடு நீங்கி, தொழில் வளம் பெருகி, வேலை வாய்ப்புகள் குவிந்து, தமிழகம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்திட வேண்டும். அண்டை மாநில நட்புறவுகள் சிறந்து; தமிழக மக்களின் வேதனைகள் நீங்கிட வேண்டும் என்ற நோக்கில் எங்கும் புதிய சிந்தனை மலர்கள் பூத்து குலுங்கட்டும். தொடங்கும் 2012 ஆங்கில புத்தாண்டில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): 2012ம் ஆண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய வாழ்வு தென்றலாக வரவேண்டும். கடந்த கால கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து எதிர்காலம் மக்களுக்கு அமைதியையும், முன்னேற்றத்தையும் தர வேண்டும். போனது புயலாக இருக்கட்டும். வருவது தென்றலாக இருக்கட்டும். இந்த புத்தாண்டு நன்மை பயக்கும் ஆண்டாக அமைய வேண்டும்.
ஞானதேசிகன் (தமிழக காங்கிரஸ் தலைவர்): புத்தாண்டு பிறக்கிறது. புதிய ஆண்டில் எல்லா நலமும், வளமும் தமிழக மக்கள் பெற வேண்டும். இந்தியா அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): புதிய நம்பிக்கை, புதிய உற்சாகத்துடன் 2012ம் ஆண்டு பிறக்கிறது. புத்தாண்டை வரவேற்று கொண்டாடுகிற அனைத்து மக்களுக்கும் எனது ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

வைகோ (மதிமுக தலைவர்): கணக்கற்ற சோதனைகள் தமிழகத்தையும், தமிழ்குலத்தையும் சூழ்ந்திருக்கும் காலகட்டத்தில் புதிய ஆண்டு மலர்கிறது. ஊழலற்ற ஆட்சி வேண்டும். மக்கள் மகிழ்ச்சி பெற 2012ம் ஆண்டு பாதை அமைக்கட்டும்.

No comments:

Post a Comment