Saturday, December 31, 2011

முல்லை பெரியாறு அணை விவகாரம் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருங்கள் : உம்மன்சாண்டிக்கு கருணாநிதி கடிதம்!

Saturday,December,31,2011
சென்னை::முல்லை பெரியாறு அணை பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கும்படி கேரள முதல்வர் உம்மன்சாண்டிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. கேரளாவில் உள்ள தமிழர்கள் மீதும், தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல் குறித்து நான் தெரிவித்த கவலைகள் தவறான தகவல்கள் அடிப்படையில் அமைந்தவை என அதில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எனது கவலைகள் தவறான தகவல்கள் அடிப்படையில் அமைந்தவை அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி சேனல்களிலும் வெளியான உண்மையான சம்பவங்கள் அடிப்படையில் அமைந்தவை. நெடுங்குண்டம், கைலாசபாறை, மணப்பாடு, உடுமன்சாலை போன்ற கேரள கிராமங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான தமிழர்கள், சமூக விரோத கும்பல்களால் விரட்டியடிக்கப்பட்டது, கேரள எல்லைகளில் வசிக்கும் தமிழர்களின் சொத்துகளுக்கு தீ வைத்தல் மற்றும் கல்வீசி தாக்குதல், சபரிமலைக்கு சென்ற தமிழக பக்தர்களின் வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது என பல்வேறு சம்பவங்கள் குறித்து பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் உண்மை நிலையை உங்களுக்கு உணர்த்தும்.

தமிழ்நாட்டுடனும் தமிழக மக்களுடனும் உள்ள நல்ல உறவை கேரளா மதிப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். கடந்த 9ம் தேதி திமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழர்களுக்கும் கேரள மக்களுக்கும் உள்ள வரலாற்று உறவுகளை குறிப்பிட்டுள்ளோம். பண்டைய தமிழகத்தை ஆண்ட 3 பேரரசர்களில் சேர மன்னர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கேரளாவைச் சேர்ந்த சமூக சீர்திருத்த சிந்தனையாளர்களை தமிழகம் கவுரவித்து மதித்து வந்துள்ளது. இதே போல் தமிழக சிந்தனையாளர்களை கேரளம் மதித்து வந்துள்ளது. முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டியதன் அவசியத்தை நான் உணரவில்லை என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். முல்லைப்பெரியாறு பிரச்னையில் சுப்ரீம் கோர்ட் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட 7 பேர் வல்லுனர் குழு அணை வலுவாக இருப்பதாக கடந்த 2001ம் ஆண்டு தெரிவித்துள்ளது. அணை வலுவாக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே மத்திய அரசு தனது நிலையை தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் இந்தப் பிரச்னை நிலுவையில் இருக்கும் போது புதிய அணை கட்ட முயல்வது நீதி நடவடிக்கைகளை குழிதோண்டி புதைப்பதற்கும், தமிழக மக்களுக்கு நீதி மறுக்கப்படுவதற்கும் சமமாகும்.

இரண்டு மாநிலங்களிலும் அமைதியை கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும். பிரதமர் மன்மோகன்சிங்கும் இதே கருத்தைக் கொண்டுள்ளார். பொறுப்புள்ள தேசிய கட்சியின் அனுபவம் வாய்ந்த தலைவர் என்ற முறையில் அமைதியை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் நீங்கள் அறிவீர்கள். சம்பந்தப்பட்ட அனைவரும் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும். அணையின் பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டாம் என கேரள மக்களை கேட்டுக் கொள்ள வேண்டும். இந்திய குடிமகன்களின் நலனை இந்திய அரசியல் அமைப்பு சட்டமும், சுப்ரீம் கோர்ட்டும் கவனித்து கொள்ளும். இவ்வாறு கடிதத்தில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment