Wednesday, December 14, 2011

சொத்துக்குவிப்பு வழக்கு : சசிகலா மனு மீது இன்று தீர்ப்பு!

Wednesday,December,14,2011
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று வழங்குகிறது. சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் நான்கு நாட்கள் ஆஜராகி, நீதிபதிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதனையடுத்து இரண்டாவது குற்றவாளியாக கருதப்படும் சசிகலா நீதிமன்றத்தில் ஆஜராகி கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து கடந்த 8 ஆம் தேதி, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேறும் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அன்றைய தினம் சசிகலா தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் நீதிபதிகள் கேட்கப்படும் கேள்விகள் ஆங்கிலத்தில் இருப்பதால் சசிகலா தமிழில் பதில் அளிக்கும் போது வார்த்தை பிழைகள் ஏற்படும் அதனால் அந்த கேள்விகளை தமிழில் மொழிபெயர்த்து வழங்க வேண்டும் என இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவின் தீர்ப்பு வரும் 13 ஆம் தேதி வழங்கப்படும் என மல்லிகா அர்ஜுனையா தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று நீதிபதி ஒருவர் காலமானதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது. இன்று வழங்கப்படும் அந்த தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்படுமா ? அல்லது தள்ளுபடி செய்யப்படுமா? என்பது இன்று தான் தெரியும்.

No comments:

Post a Comment