Wednesday,December,14,2011மராட்டிய மாநிலத்தில் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், விமானிகள் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்!.
போர் விமானம் விபத்து
மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள லோகேகான் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று மதியம் 12.45 மணி அளவில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான சுகோய்-30 போர் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் 2 விமானிகள் இருந்தனர்.
புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்தது. அந்த விமானம் மதியம் 1.10 மணி அளவில் புனே அருகே உள்ள காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் தீப்பிடிக்க ஆரம்பித்தது. உடனடியாக, சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வண்டிகளில் விரைந்து சென்ற வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விமானிகள் தப்பினர்
விபத்துக்குள்ளான போர் விமானத்தில் இருந்த விமானிகள் 2 பேரும் சரியான நேரத்தில் பாராசூட் மூலமாக கீழே குதித்தனர். இதனால் அவர்கள் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
சம்பவம் நடந்த பகுதிக்கு, இந்திய விமானப் படையைச் சேர்ந்த குழுவினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
30 போர் விமானங்கள்
விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானம் ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்டு, 1997-ம் ஆண்டு முதல் இந்திய விமானப் படையில் சேர்க்கப் பட்டது. இத்துடன் சேர்த்து, இந்த வகையான விமானங்கள் இதுவரை 3 தடவை விபத்துக்கு உள்ளாகி உள்ளன.
இதேபோன்று, ரஷ்ய தயாரிப்பான மிக்-21 ரக போர் விமானமும் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் மிக் ரக போர் விமானங்களுடன் சேர்ந்து மொத்தம் 8 போர் விமானங்கள் விபத்தில் சிக்கி உள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்திய விமானப் படை 30 போர் விமானங்கள் மற்றும் 10 ஹெலிகாப்டர்களை விபத்தில் பறி கொடுத்துள்ளது. இதில் 26 ராணுவ வீரர்கள், 13 விமானிகள் மற்றும் 6 பொதுமக்கள் உயிர் இழந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment