Monday, December 12, 2011இலங்கை::சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வைபவமொன்றை ஏற்பாடு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவர் காணாமல் போயுள்ளமை குறித்து சில அமைப்புக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை மனித உரிமைகள் கேந்திர நிலையம் மற்றும் சுதந்திரமானதும் நீதியுமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு ஆகியன இந்த சம்பவத்திற்கு அதிருப்தி தெரிவித்துள்ளன.
கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் இரண்டு பேர் காணாமல் போயுள்ளமை, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்கான அடிப்படைக் காரணியாக அமைந்துள்ளது என்று கெஃபே என அழைக்கப்படும் சுதந்திரமானதும் நீதியுமான மக்கள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் போதல் சட்டவிரோதமாக தடுத்து வைத்தல் என்பவற்றிற்கு எதிராக செயற்படுதல் மற்றும் அரசியல் செயற்பாடுகள் காரணமாக, இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் காணாமல் போயுள்ள லலித் வீரராஜ், அச்சுறுத்தலுக்கு இலக்காகியிருந்ததாக கெஃபே அமைப்பு கூறுகின்றது.
அதேபோன்று கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் கிளிநொச்சியில் வைத்து அவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் லலித் வீரராஜ் என்பவருக்கு அரசியல் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ளுமாறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்ததாக கெஃபே அமைப்பு குறிப்பிடுகின்றது.
லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தம் ஆகியோர் இருவரும் காணாமல் போனமை குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறும் அவர்கள் இருக்குமிடங்களை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இலங்கை மனித உரிமைகள் கேந்திர நிலையம் மற்றும் கெஃபே அமைப்பு ஆகியன சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
No comments:
Post a Comment