Monday, December 12, 2011

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானது-வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்!

Monday, December 12, 2011
இலங்கை::வடக்கில் கல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானது என்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

சிலர் தமது அரசியல் இலாபத்திற்காக உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருவதாக தெரிவித்த அவர் இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை தான் முற்றாக மறுப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

வடக்கில் குறுகிய காலப் பகுதிக்குள் பாரிய அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் வட மாகாண மக்களின் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களுக்காக பல கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஸ்ரீதரன் எம்.பி. அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி மேலும் கருத்து தெரிவிக்கையில் :-

வட பகுதி மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக வட மாகாண சபையின் ஊடாக பாரிய திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இந்நிலையில் இந்த மக்களின் கல்வி உட்பட ஏனைய செயற்பாடுகளுக்கு எந்த முட்டுக்கட்டையும் கிடையாது.

ஆளுநர் என்ற வகையில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட நான் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தையும், ஜனாதிபதி அவர்களின் கொள்கையையும் மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்துவதில் முன்னின்று செயற்பட முடியும்.

பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அதிதிகளாக செல்லும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகள் சிலர் மாணவர்களின் எதிர்கால கல்வி மேம்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிப்பதை விட்டு ஈழ சிந்தனைகள் தொடர்பிலே உரையாற்றுகின்றனர்.

எனவே நாட்டுக்கோ, அரசுக்கோ, எதிராக செயற்படும் விடயத்தை அந்த மாகாணத்தின் ஆளுநர் என்ற வகையில் நான் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார்.

குறுகிய காலங்களில் ஆயிரக்கணக்கானோர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு அரசு துறையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் பக்கச் சார்பற்ற முறையில் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்த அவர் இதனை எவரும் பரிசீலித்து பார்க்கலாம் என்றார்.

No comments:

Post a Comment