Monday, December 12, 2011புதுடெல்லி::பிரதமர் மன்மோகன்சிங் வருகிற 15-ந் தேதி ரஷியா தலைநகர் மாஸ்கோவுக்கு பயணமாகிறார். அவருடன் முக்கிய அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழுவும் செல்கிறது. 16-ந் தேதி அங்கு இரு நாட்டு குழுவினரின் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் இந்தியக்குழுவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் தலைமை தாங்குகிறார். ரஷிய குழுவுக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் தலைமை தாங்குகிறார்.
இந்த உச்சி மாநாட்டில் அணுசக்தி துறை, ராணுவ பாதுகாப்பு, வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது.
இந்த துறைகளில் இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக சுமார் 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதுடன், ஜனாதிபதி மெட்வடேவ், பிரதமர் புதின் ஆகியோருடன் மன்மோகன்சிங் இரு நாடுகளின் உறவை பலப்படுத்தும் வகையில் தனியாக முக்கிய பேச்சு வார்த்தையும் நடத்துகிறார்.
ரஷிய நாட்டின் ஒத்துழைப்புடன் கூடங்குளத்தில் 2 அணுமின் நிலையங்கள் கட்டப்பட்டு, உற்பத்தியை தொடங்கும் நிலையில் உள்ளன. அங்கு மேலும் 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதை அமல்படுத்துவது குறித்தும் இரு நாட்டு குழுவினரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.
இந்த உச்சி மாநாட்டுக்கு முன்னதாகவே இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு தேவையான அணுசக்தி வசதிகளை வழங்க ரஷியா முன் வந்து உள்ளது. இது பற்றி ரஷியா நேற்றே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
2015-ம் ஆண்டு வரை ரஷியா ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய முடிவு செய்து உள்ளது. இதன் மூலம் இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் மட்டுமல்லாது வர்த்தக உறவு மென்மேலும் வளர நல்ல சூழல் ஏற்படும்'' என்று இந்தியாவுக்கான ரஷியா தூதர் அலெக்சாண்டர் கடாகின் தெரிவித்தார்.
ரஷிய பாராளுமன்றத்துக்கு சமீபத்தில்தான் தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு பின்னர் முதன் முதலாகச் செல்லும் சர்வதேச தலைவர் மன்மோகன்சிங்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment