Monday, December 05, 2011சென்னை : பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன்படி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் மற்றும் நகரில் இருக்கும் அனைத்து மின்சார ரயில் நிலையங்களிலும் போலீசார் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் போலீசார் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று ரயில்வே பாதுகாப்புபடை முதுநிலை கோட்ட ஆணையர் எஸ்.ஆர்.காந்தி உத்தரவுப்படி, ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் திருச்செல்வம் தலைமையில், 10 இன்ஸ்பெக்டர்கள், 100 ஆர்பிஎப் வீரர்கள் அடங்கிய குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 2 மோப்ப நாய்கள் அடங்கிய மோப்ப நாய் குழுவினர், வெடிகுண்டு நிபுணர் குழுவினர் ரயில் நிலையத்துக்கு வந்திருந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யப்பட்டன. பிளாட்பாரங்களில் குவித்து வைக்கப் பட்டிருந்த பார்சல்கள், லக்கேஜ்கள் என அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ரயில்களுக்குள்ளும் போலீசார் சோத னையில் ஈடுபட்டனர்.
சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்கு பாதுகாப்பு: சென்னை விமான நிலையத்தில் ஏற்கெனவே 4 அடுக்கு பாதுகாப்பு உள்ளது. அதை நேற்று முதல் 7 அடுக்கு பாதுகாப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 7ம் தேதி வரை இந்த பாதுகாப்பு தொடரும். பாதுகாப்பு பணியில் கூடுதலாக நூறு போலீசார் ஈடுபட்டுள்ளனர். விமான நிலைய உள்நாட்டு முனையம், வெளிநாட்டு முனையம், கார் பார்க்கிங் உட்பட அனைத்து பகுதிகளிலும் 24 மணி நேரமும் வெடிகுண்டு நிபுணர்கள், தீவிரமாக மோப்ப நாய் உதவியுடன் கண்காணித்து வருகின்றனர்.
விமான நிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் நுழைவு வாசலிலேயே நிறுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது.
துப்பாக்கி ஏந்திய போலீசார் விமான நிலையத்தின் உள், வெளிப் பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு அதிரடிப்படை போலீசார், கமான்டோ படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பயணிகளுக்கு ஏற்கெனவே நடந்துவரும் பாதுகாப்பு சோதனைகளுடன் கூடுதலாக இரண்டு முறை சோதனைகள் நடத்தப்படுகின்றன. அதற்கு வசதியாக, உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள், ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாகவும் வெளிநாட்டு பயணிகள் மூன்றரை மணி நேரத்துக்கு முன்னதாக வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கேட்பாரற்று கிடந்த அட்டைப்பெட்டி
இதற்கிடையில், உள்நாட்டு முனைய கார் பார்க்கிங் அருகே நேற்று மாலை ஒரு அட்டைப்பெட்டி கேட்பாரற்று கிடந்தது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வந்து மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். முதல் கட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவுமில்லை என்று தெரியவந்தது. பின்பு பலத்த பாதுகாப்புடன் காலிமைதானத்தில் வைத்து திறந்து பார்த்தனர். அதில் குழந்தைகளுக்கான 2 பால் பவுடர் டின்கள் இருந்தன.
No comments:
Post a Comment