Wednesday,December,28,2011சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘தானேÕ புயல், சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் இன்று இரவு முதல் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் அதிகாலை சென்னை அருகே புயல் கரையை கடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வங்கக் கடலின் தெற்கு திசையில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. இலங்கைக்கு கிழக்கே மையம் கொண்டிருந்த அது, மெல்ல வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது.
மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு வந்தது. நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னைக்கு கிழக்கே 750 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. நேற்று காலை அது மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. சென்னைக்கு கிழக்கே 600 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த புயலுக்கு ‘தானே’ என்று பெயரிடப்பட்டது. சென்னை, கடலூர் துறைமுகங்களில் 1 மற்றும் 5-ம் எண் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், புதுச்சேரி, பாம்பன் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலில் சீற்றம் அதிகம் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதனால், கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ‘தானே’ புயல், 30-ம் தேதி அதிகாலை கடலூர் - நெல்லூர் இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் கடலில் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. ராட்சத அலைகளால் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த பைபர் படகுகள், மீன்பிடி வலைகள் சேதம் அடைந்துள்ளன. பாம்பன் பகுதியில் இன்று காலை கடல் திடீரென 15 அடி உள்வாங்கியது. கடல் பகுதி வழக்கத்துக்கு மாறாக அமைதியாக காணப்படுகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது: இன்று காலை நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 550 கி.மீ. தொலைவில் ‘தானே’ புயல் மையம் கொண்டுள்ளது. இது சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. நாளை மறுநாள் (30-ம் தேதி) அதிகாலை கடலூர் -நெல்லூர் இடையே புயல் கரையை கடக்கும். சென்னைக்கு மிக அருகில்தான் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது புயல் காரணமாக கடல் பகுதியில் 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. புயல் கரையை கடக்கும்போது தரைக்காற்று பலமாக வீசும். கடல் கொந்தளிப்பாக காணப்படும். புயல் காரணமாக இன்று மாலை அல்லது இரவில் இருந்து வடதமிழகம், புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்யக் கூடும். இவ்வாறு ரமணன் தெரிவித்தார்.
சென்னையை புயல் நெருங்குவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். புயல் ஆபத்து உறுதியாகும் பட்சத்தில் கடலோர பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கல்யாண மண்டபங்கள், சமூகநல கூடங்கள், பள்ளிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment