Sunday, December 04, 2011வாஷிங்டன், : அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை மீண்டும் தாக்கினால் உடனடியாக பதில் தாக்குதல் நடத்துமாறு வீரர்களுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானி உத்தரவிட்டதால், அமெரிக்க ராணுவம் ஆத்திரம் கொண்டுள்ளது. அமெரிக்க வீரர்களை தாக்கினால் பதிலடி தரப்படும் என்று எச்சரித்துள்ளது. கடந்த நவம்பர் 26ம் தேதி ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது நேட்டோ படை நடத்திய தாக்குதலில் 24 வீரர்கள் பலியாயினர். இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாகிஸ்தான் முழுவதும் அமெரிக்க எதிர்ப்பு கிளர்ச்சிகள் வெடித்துள்ளன. அமெரிக்க கொடியை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சரவை கூடி, நேட்டோ படையினருக்கான உதவியை நிறுத்தவும், பாகிஸ்தானில் இருந்து 15 நாட்களுக்குள் நேட்டோ படை வெளியேறக் கோரியும் முடிவு எடுத்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தான் வீரர்களை கொன்று குவித்த நேட்டோ படை மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது என்று பாகிஸ்தான் தெரிவித்தது. இது அமெரிக்க அதிபர் ஒபாமாவை எரிச்சல் அடையச் செய்தது.விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் தொடர்ந்து அமெரிக்க எதிர்ப்பை பாகிஸ்தான் அரசு அதிகரிப்பதாக அவர் கருதுகிறார். இந்நிலையில், அமெரிக்க அரசு சார்பில் மன்னிப்பு கேட்க முடியாது என்று வெள்ளை மாளிகை அறிவித்தது.
இந்நிலையில், பலுசிஸ்தான் மாநிலம் சகாய் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் ஆப்கனில் உள்ள உறவினர்களை பார்க்க சென்றபோது பிப்ஜன் என்ற பகுதியில் நேட்டோ படையால் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது நடந்ததும், பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானி கூறுகையில், ‘அமெரிக்க படை தாக்குதல் நடத்தினால் யாருடைய அனுமதியையும் எதிர்பாராமல் உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும் என்று வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்Õ என கூறினார்.
இதுபற்றி வாஷிங்டனில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தி தொடர்பாளர் நேற்று பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தார். ‘‘அமெரிக்க & பாகிஸ்தான் ராணுவ உறவு பாதிக்கப்பட்டுள்ளது உண்மை. கயானியின் பேச்சை கேட்டேன். தற்காத்து கொள்வது நாடுகளின் உரிமை. அது அமெரிக்காவுக்கும் பொருந்தும். அமெரிக்க வீரர்களும் தங்களை தற்காத்துக் கொள்வார்கள். அதனால் மோசமான விளைவுகள் ஏற்படலாம்’ என்றார்.
விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு
நேட்டோ படை தாக்குதல் குறித்து விசாரிக்க அமெரிக்கா தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவில் பங்கேற்க முடியாது என்று பாகிஸ்தான் நேற்று அறிவித்தது. அமெரிக்காவுடன் உறவு பற்றி மறுஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டதாக பாகிஸ்தான் பிரதமர் கிலானி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குழுவிடம் அவர் நேற்று கூறுகையில், ‘நமது பொறுமைக்கும் எல்லை உண்டு. ஒத்துழைப்பு என்பது ஒருவழி பாதையல்ல. பாகிஸ்தான் மண்ணில் அன்னிய படை அத்துமீறினால், அந்த நாட்டுடன் உறவு பற்றி மறுஆய்வு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்’ என்றார்.
No comments:
Post a Comment