Sunday, December 04, 2011சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக ஞானசேசிகன் எம்.பி. பதவி ஏற்றதும், தமிழகத்திற்கு வரும் மத்திய மந்திரிகள் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்களை சந்தித்து குறைகளை கேட்பார்கள் என்று அறிவித்தார்.
இதைதொடர்ந்து முதல் முறையாக மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நேற்று சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் தொண்டர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மனு கொடுத்தனர். காங்கிரஸ் தொண்டர்களின் குறைகளை கேட்ட பின்பு மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய மந்திரிகள், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னையில் இருக்கும்போது சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்து காங்கிரஸ் தொண்டர்களை சந்திப்பார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானசேசிகன் கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் நான் சத்திமூர்த்திபவனில் தொண்டர்களை சந்தித்தேன். சென்னையில் இருக்கும் நாட்களில் தொடர்ந்து சத்தியமூத்திபவனுக்கு வருகைதந்து கட்சி தொண்டர்களை மட்டும் அல்லாமல், பொதுமக்களின் குறைகளையும் கேட்டு, முடிந்தவரையில் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளை செய்வோம்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் உள்ளது. தமிழக காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து, குறிப்பாக தமிழக மக்களின் உணர்வுகளை வலியுறுத்தியுள்ளனர். இத்தகைய நடவடிக்கையின் காரணமாக இந்த பிரச்சினையில் சுமுகமான தீர்வு ஏற்படவேண்டும் என்று நான் நம்புகிறேன்.
இந்த பிரச்சினையில் உணர்ச்சி வசப்பட்டு அரசியல் ஆதாயநோக்கத்தோடு அணுகாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவேண்டும். அல்லது நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும்.
வருகிற நாட்களில் நியாயத்தின் அடிப்படையில் உறுதியோடு மத்திய அரசு நல்ல முடிவை எடுத்து, இரு மாநில மக்களின் உறவு சுமுகமாக தொடரும் வகையிலே செயல்படும். மத்திய அரசு இதில் மவுனம் காக்கவில்லை.
லோக்பால் பிரச்சினையில் அண்ணாஅசாரே கூறியுள்ள கருத்து ஏற்புடையது அல்ல. மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு லோக்பால் மசோதாவை கொண்டுவரவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்துவருவதை நான் நினைவுகூர விரும்புகிறேன்.
தமிழக மீனவர்களுக்கு நடக்கும் அநீதி கண்டனத்திற்குறியதாகும். மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு பல்வேறு நிலைகளில் முயற்சி எடுத்துவருகிறது. வரும்காலங்களில் மீனவர்களுக்கு இதுபோன்ற நிலை ஏற்படாத வகையில் மத்திய அரசு செயல்படும்.
மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்காக நிதியை கொடுத்து, அந்தந்த மாநிலங்களின் உள்கட்டமைப்பை வளர்க்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லாமல் மத்திய அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.
தொடர்ந்து 7 ஆண்டுகளாக தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக மத்திய அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று பெருமையாக கூறமுடியும். மத்திய அரசின் திட்டங்களும் நிதியும் தமிழகத்திற்கு பல்வேறு வகையில் கிடைத்துக்கொண்டு இருக்கிறது. இந்த வருடம் கூட மத்திய அரசு திட்டக்கமிஷனில் இருந்து 17 சதவீதம் தமிழக அரசுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கியதை நினைவுகூறவிரும்புகிறேன்.வருகிற காலங்களிலும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக அனைத்து பணிகளையும் செய்யும்.
இவ்வாறு மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், அடுத்த வாரம் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்களை சந்திப்பார் என்றும் இதை தொடர்ந்து மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் தொண்டர்களை சந்திப்பார் என்றும் எந்த தேதியில் சந்திப்பார்கள் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். பேட்டியின்போது தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் உடன் இருந்தார்.
No comments:
Post a Comment