Wednesday, December 7, 2011

சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு திட்டம் நிறுத்திவைப்பு!

Wednesday,December,07,2011
புதுடெல்லி : சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு அறிவித்தது. இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொண்டன. இது தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய அரசின் நடவடிக்கையை தொடர்ந்து நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டுள்ளன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. விலைவாசி உயர்வு, கருப்பு பணம், தெலங்கானா ஆகிய பிரச்னைகளை முன்வைத்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் இறங்கின. தெலங்கானா விவகாரத்தில் அந்த பிராந்தியத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்களும், முல்லை பெரியாறு விவகாரத்தில் திமுக எம்பிக்களும் அவையில் கோஷம் எழுப்பினர். இதனால் முதல் 5 நாட்கள் எந்த அலுவலும் நடைபெறாமல் நாள் முழுக்க இரண்டு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் நீண்டநாட்களாக கிடப்பில் கிடந்த சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு பிரச்னையை மத்திய அரசு கையில் எடுத்தது. மல்டிபிராண்டு சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டுக்கும், சிங்கிள் பிராண்டு வணிகத்தில் 100 சதவீத முதலீட்டுக்கும் மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்கட்சிகள் மட்டும் அல்லாது காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திரிணாமுல் மற்றும் திமுகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஏற்கனவே இருந்த பிரச்னைகளுடன் அன்னிய முதலீடு பிரச்னையும் சேர்ந்து கொண்டது. அன்னிய முதலீடு முடிவை கைவிடும்வரை நாடாளுமன்றத்தை நடத்தவிட மாட்டோம் என பா.ஜ. மற்றும் இடதுசாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தன. இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர பா.ஜ. தரப்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து திமுக மற்றும் திரிணாமுல் தலைமையுடன் பிரதமர் மன்மோகன்சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமரின் கோரிக்கையை மம்தா பானர்ஜி ஏற்றுக் கொள்ளவில்லை. மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் மம்தாவுடன் பேசி பார்த்தார். ஆனால் தனது நிலையிலிருந்து மம்தா இறங்கி வரவில்லை.

இதை தொடர்ந்து கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப், ‘அன்னிய முதலீட்டுக்கான அனுமதி நிறுத்தி வைக்கப்படும்’ என சூசகமாக தெரிவித்தார். மேலும், ‘நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் வெளியில் இதுகுறித்து எதுவும் தெரிவிக்க முடியாது’ என்றார் பிரணாப். இந்நிலையில் நேற்று முன்தினம் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பா.ஜ. மூத்த தலைவர் எல்.கே.அத்வானியுடன் பிரணாப் முகர்ஜி பேசினார். அன்னிய முதலீடு முடிவை நிறுத்திவைப்பதாகவும், நாடாளுமன்றம் சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். மத்திய அரசு தனது நிலையை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என சுஷ்மா கோரிக்கை வைத்தார். மேலும் இதுகுறித்து அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பிரணாப்பிடம் கோரிக்கை வைத்தார்.

அதன்படி டெல்லியில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நிறுத்திவைப்பதாக பிரணாப்முகர்ஜி தெரிவித்தார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொண்டன. நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு அளிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் உறுதி அளித்தன.

No comments:

Post a Comment