Wednesday, December 7, 2011

கேப்டன் டோணிக்கு தீவிரவாதிகள் குறி: உளவுத்துறை எச்சரிக்கை!

Wednesday,December,07,2011
டெல்லி: கூல் கேப்டன் என்று பெயர் எடுத்துள்ள கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோணிக்கு தீவிரவாத அமைப்புகளான லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது ஆகியவை குறிவைத்துள்ளன என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் கிரிக்கெட் உலகில் அறிமுகமான டோணி உலகக் கோப்பையை வென்றதன் மூலம் இந்தியர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளார். எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்காமல் செயல்படுவதால் கூல் கேப்டன் என்று அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில் தீவிரவாத அமைப்புகளான லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது ஆகியவை பல முக்கிய புள்ளிகளுக்கு குறிவைத்துள்ளன. அந்த தாக்குதல் பட்டியலில் டோணியின் பெயரும் உள்ளது என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து ஜார்க்கண்ட் போலீசார் டோணிக்கு கூடுதல் பாதுகாப்பு அளித்துள்ளனர். முக்கிய புள்ளிகளுக்கு தீவிரவாதிகள் குறி வைத்துள்ளது பற்றி அனைத்து மாநில போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் டோணி விமான நிலையத்தில் இருந்து ஹர்மு ஹவுசிங் காலனியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றபோது அவருடன் ஒரு ஜீப் நிறைய போலீசார் பாதுகாப்புக்காக சென்றனர். டோணியின் வீடு மற்றும் அந்த பகுதியில் சாதாரண உடை அணிந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், ஆமீர் கான், சல்மான் கான், ஷாருக் கான் ஆகியோர் பெயர்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment