Monday, December 26, 2011

கேரளாவில் தமிழர்கள் மீதான தாக்குதலை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்!

Monday,December, 26,2011
சென்னை : முல்லை பெரியாறு பிரச்னை தொடர்பான விரிவான மனு ஒன்றை தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன்சிங்கிடம் திமுக தலைவர் கருணாநிதி இன்று நேரில் வழங்கினார். சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9 மணியளவில் பிரதமர் மன்மோகன்சிங்கை திமுக தலைவர் கருணாநிதி சந்தித்து முல்லை பெரியாறு அணை பிரச்னை சம்பந்தமாக விவாதித்தார். இது தொடர்பாக விரிவான மனு ஒன்றையும் பிரதமரிடம் அளித்தார். மனுவினை பிரதமர் கவனமாக படித்துப் பார்த்தார். இந்தச் சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.

முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்தின் பக்கமுள்ள நியாயத்தையும், 2006ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பையும், அதற்கு மாறாக கேரள அரசு தொடர்ந்து கடைபிடித்து வரும் அணுகுமுறையையும், அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைப்பதற்கும், புதிய அணை கட்டுவதற்கும் கேரள அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளையும் கருணாநிதி விளக்கி சொன்னார்.

அனைத்தையும் கேட்டுக் கொண்ட பிரதமர், இரு மாநிலங்களுக்கிடையே நீண்ட காலமாக நிலவி வரும் உறவும் நட்பும் எந்த விதத்திலும் பாதிக்கப்பட கூடாது என்றும், இரு மாநிலங்களிலும் அமைதியும் சுமூகமான வாழ்க்கை முறைகளும் திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதற்காக மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் உறுதியாக மேற்கொள்ளும் என்றும் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை மத்திய அரசே மேற்கொள்வது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் பதில் உரைத்தார்.

பிரதமர் மன்மோகன்சிங்கிடம் திமுக தலைவர் கருணாநிதி கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: முல்லை பெரியாறு அணை பிரச்னை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அணையின் நீர்மட்டத்தை குறைக்கவோ, புதிய அணை கட்டவோ கேரள அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும் தமிழக மக்களுக்கு அநீதி விளைவிக்கும் முயற்சியாகும். அணை பாதுகாப்பு குறித்து கேரள அரசு பரப்பி வரும் தவறான தகவல் காரணமாக கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் மீதும், தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இரு மாநில எல்லைகளில் பதற்றமான நிலை நிலவுகிறது.

மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகளை நிர்வகிக்க தற்போதுள்ள அமைப்புகள் நடைமுறையில் திறமையற்றதாக இருப்பதை கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் நான் எச்சரித்திருந்தேன். ஆசியாவில் கட்டப்பட்ட முதல் அணை என்ற வரலாற்று சிறப்பு பெரியாறு அணைக்கு உள்ளது. அணையை பலப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் பின்னரும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்காமல் அணையின் நீர் அளவை 136 அடியாக கேரள அரசு பராமரித்து வருகிறது. இதனை தற்போது 120 அடியாக குறைக்க கோரிக்கை வைத்துள்ளது.

கேரள அரசு தனது நிலையில் பிடிவாதமாக இருந்தால் தமிழகத்தில் 5 மாவட்டங்கள் நீர் வசதியின்றி பாலைவனமாக மாறிவிடும். அணையின் பாதுகாப்பு பணியில் கேரள போலீசுக்கு பதில் மத்திய போலீஸ் படையை நிறுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட அதிகாரமிக்க குழுவின் தலைவருக்கு கடந்த 4ம் தேதி கடிதம் எழுதியுள்ளேன். இந்த பிரச்னை காரணமாக தமிழர்களும், கேரளத்தவர்களும் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் போல மோதிக் கொள்ளும் அளவுக்கு தூண்டப்பட்டு வருகிறார்கள்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தீக்குளித்து உயிரை மாய்த்துள்ளார். இந்தப் பிரச்னை உடனடியாக மாற வேண்டும். கட்டுப்படுத்தப்படவேண்டும். இல்லையென்றால் இரு மாநில மக்கள் இடையே நிரந்தர பிளவு ஏற்பட்டுவிடும். இந்த விவகாரத்தில் நீங்கள் உடனடியாக தலையிட்டு கேரளாவில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். கடந்த 2006ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை கேரள அரசு மதித்து நடப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment