Friday, December 9, 2011

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவதற்கான தேசிய திட்டமொன்று அவசியம் - விஜேதாச ராஜபக்ஸ!

Friday, December 09, 2011
இலங்கை:நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவதற்கான தேசிய திட்டமொன்று அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பாராளுமன்ற உறுப்பினர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

நீதி, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான இன்றைய குழுநிலை விவாதத்தை ஆரம்பித்து வைத்து கருத்து வெளியிட்ட விஜேதாச ராஜபக்ஸ, சட்டமா அதிபர் திணைக்களம் மீதான நம்பகத்தன்மையை வலுப்பெறச்செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், அங்கவீனமுற்ற நிலையிலுள்ளவர்களும், பெண் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை சபையில் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, பிணை தொடர்பான புதிய சட்டமொன்று அமுல்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா பாராளுமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

குழுநிலை விவாதத்தில் பங்கேற்ற நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் எதிர்க்கட்சியினர் சுமத்திய குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார்.

பிரதமர் டி.எம்.ஜயரத்ன சபையில் உரையாற்றியபோது, பிக்குகளுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரணை செய்வதற்கான பிரத்தியேக நீதிமன்றக் கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான சட்டங்களை கொண்டுவரவுள்ளதாகக் கூறினார்.

இதனிடையே சிறைச்சாலை அதிகாரிகளுக்கு செப்டம்பர் மாதம் முதல் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிறேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, பாராளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் புனர்வாழ்வளிக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்கள் 100 பேருக்கு இன்று வழங்கப்பட்டது.

வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலுள்ள 104 பெண்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் நேற்றிரவு வவுனியாவில் இருந்து கொழும்பிற்கு வருகை தந்துள்ளனர்.

வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தினை பார்வையிடுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டதாக எமது செய்தியாளர்கள் கூறினார்.

No comments:

Post a Comment