Sunday, December 25, 2011

ரகசியக் குறியீடுகளை மாற்றிய வடகொரியா : தென் கொரியாவுக்கு மேலும் சிக்கல்

Sunday, December 25, 2011
இலங்கை::சியோல் : வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் இல்லின் மரணத்திற்குப் பின், தென்கொரியா உளவு பார்த்து வருவதால், அதைத் தடுக்கும் வகையில், தகவல் பரிமாற்றங்களில் ரகசிய குறியீடுகளை, வடகொரியா மாற்றியுள்ளது.

வடகொரிய தலைவர் கிம் ஜாங் இல் மறைந்த பின், அந்நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்து அறிந்து கொள்ள, தென் கொரியா அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அதற்காக, தென் கொரிய உளவுத் துறை முடுக்கி விடப்பட்டுள்ளது. கிம் ஜாங் இல் மரணம் அடைந்த செய்தி கூட உடனடியாக, வெளியுலகுக்குத் தெரிந்து விடாதபடி, வடகொரியாவின் உளவுத் துறை செயல்பட்டதைக் கண்டு, தென் கொரியா அதிர்ச்சியில் உறைந்திருந்தது. அதன் பின் தான், தென் கொரிய உளவுத் துறை, வடகொரியாவை உளவு பார்ப்பதில் அதிக வேகம் காட்டி வருகிறது.

மேலும், கிம் ஜாங் இல் இறந்த உடன், பல்வேறு இடங்களில் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த ராணுவத்தினரை உடனடியாக, பயிற்சிகளைக் கைவிட்டு தங்கள் தளங்களுக்குத் திரும்பும்படி, புதிய தலைவர் கிம் ஜாங் உன் முதன் முதலாக உத்தரவு பிறப்பித்ததாக, தென் கொரிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன. இந்த உத்தரவு ரகசிய குறியீடுகளாக, கம்பியில்லா தந்திகள் மூலம் ராணுவத்தினருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்தக் குறியீடுகளை, தென் கொரிய ராணுவம் கண்டுபிடித்து, தகவலை அறிந்து கொண்ட பின் தான், தென் கொரிய ஊடகங்களில் கிம் ஜாங் உன்னின் முதல் உத்தரவு பற்றிய தகவல்கள் வெளிவந்தன.

இதையடுத்து, தற்போது வடகொரியா தனது உளவு மற்றும் ராணுவத் தகவல்களுக்கான ரகசியக் குறியீடுகளை மாற்றி அமைத்துள்ளது. இதனால், தென் கொரியா உளவு பார்ப்பதில், மேலும் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது

No comments:

Post a Comment