Thursday, December 29, 2011

இலங்கையில் காவலில் உள்ள தமிழக மீனவர்கள் பிரச்னைக்காக தனி அதிகாரி நியமனம்: ஞானதேசிகன் தகவல்!

Thursday, December 29, 2011
சென்னை: தமிழக மீனவர்கள் பிரச்னைக்காக தனி அதிகாரியை, மத்திய அரசு நியமிக்க உள்ளதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது அறிக்கை: இலங்கையில் காவலில் உள்ள ஐந்து தமிழக மீனவர்களுக்கு, அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் மூலம் வழக்கறிஞர் நியமனம் முதல், அனைத்து வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், மீண்டும் அது தொடர்பாக அந்நாட்டு அரசுடன் பேசப் போவதாகவும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் கூறினார். மத்திய அரசு, தமிழக மீனவர்கள் நலன் காக்க எடுத்து வரும் நடவடிக்கைகளையும் விளக்கினார். கச்சத்தீவை மீண்டும் பெறுவது வரை, அத்தீவை குத்தகைக்கு எடுக்கலாம் என்ற ஆலோசனையும், தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவசர காலங்களில் தமிழக மீனவர்கள் தொடர்பு கொள்ள தனியாக ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை, சிவசங்கர மேனன் ஏற்றுக் கொண்டார். விரைவில், இதற்கான தனி அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும், அவர் யார் என்பதை தெரிவிப்பதாகவும் அவர் என்னிடம் கூறினார். எனவே, தமிழக மீனவர்கள் பிரச்னை விரைவில் தீரும் என்று நம்புகிறேன். இவ்வாறு ஞானதேசிகன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment