Friday, December 30, 2011

தானே’ புயல் எதிரொலி பஸ், ரயில் போக்குவரத்து பாதிப்பு : நடுவழியில் ரயில்கள் நின்றதால் மக்கள் கடும் அவதி!


Friday, December,30, 2011
சென்னை::தானே’ புயல் காரணமாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்வதால் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து தமிழகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்ட ரயில்கள் 2 மணி நேரம் தாமதமாக வந்தன. ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். ‘தானே’ புயல் கடுமையாக தாக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்ததால், ரயில்களை மெதுவாக இயக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால், சென்னை சென்ட்ரலுக்கு வரும் மற்றும் இங்கிருந்து போகும் மின்சார ரயில்கள் 30 முதல் 45 நிமிடம் தாமதமாக இயக்கப்பட்டன. பாலங்கள், நீர் தேங்கியுள்ள இடம், கடற்கரை பகுதிகளில் ரயில்கள் மிகவும் மெதுவாக இயக்கப்பட்டன. குறிப்பாக, சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில்கள் தாமதமாக சென்றன.

சூலூர்பேட்டை அருகில் சொர்ணமுகி ஆற்றில் வெள்ள பெருக்கு அதிகமாக இருந்ததால், ஆற்றின் அருகில் உள்ள பாலத்தில் மின்சார ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் 2 மணி நேரம் கழித்து ரயில் இயக்கப்பட்டது. வடமாநிலத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ஜி.டி. எக்ஸ்பிரஸ் உள்பட சில ரயில்களும் தாமதமாக வந்தன. விழுப்புரம் அருகிலுள்ள முண்டியம்பாக்கத்தில் மரம் முறிந்து தண்டவாளத்தில் விழுந்ததால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்களும் தாமதம் ஆனது. குறிப்பாக, பாண்டியன், மதுரை சிறப்பு ரயில், நெல்லை, கன்னியாகுமரி, முத்துநகர், பொதிகை, அனந்தபுரி உள்ளிட்ட தென்மாவட்ட ரயில்கள் சுமார் 2 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தன. ரயில்கள் மிக மெதுவாக இயக்கப்பட்டன. சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு காலையில் 8.20 மணிக்கு கிளம்பவேண்டிய சோழன் எக்ஸ்பிரஸ் இன்று ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். புயல் கரையை கடந்த நேரத்தில், மின்சார ரயில்கள் முடிந்த அளவிற்கு ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன, மற்ற ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அதேநேரத்தில், சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள், பறக்கும் ரயில்கள் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதேபோல் சென்னை நகர் மற்றும் புறநகரில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து கிடந்ததால் பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

வீடுகளில் தண்ணீர் புகுந்தது பழவேற்காடு கடலோர பகுதியில் 1100 பேர் வெளியேற்றம் : முகாம்களில் தங்கினர்!

பொன்னேரி : வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக உருவான ‘தானே’ புயலால் கடற்கரை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. பழவேற்காடு பகுதியில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலையால் கடல்நீர் வீடுகளில் புகுந்தது. பழவேற்காடு கடலோர பகுதியில் உள்ள கோரை குப்பம், நடுகுப்பம், செம்பாசி பள்ளி குப்பம், லைட்ஹவுஸ் குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 245 குடும்பத்தை சேர்ந்த 1101 பேர் நேற்று அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பொன்னேரி தாசில்தார் அந்தோணி, துணை தாசில்தார் தமிழ்செல்வன், பாலமுருகன், செந்தில் நாதன் வருவாய் துறை ஊழியர்கள் பொன்னேரியில் இரண்டு திருமண மண்டபங்களில் பாதிக்கப்பட்டோரை தங்க வைக்க ஏற்பாடு செய்தனர். இந்த இரண்டு முகாம்களிலும் மக்களுக்கு தேவையான உணவு, டீ, பிஸ்கட், ரொட்டி வழங்கப்பட்டு வருகிறது. மழை, கடல்சீற்றம் குறையும் வரை அவர்கள் அங்கு தங்கியிருப்பார்கள். பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதியில் பலத்த காற்றால் மின்கம்பம் சாய்ந்தது. மரம் முறிந்து விழுந்தது. மீஞ்சூர் அருகே மவுத்தம்பேட்டில் உயர்மின் அழுத்த வயர் அறுந்து விழுந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment