Friday, December,30, 2011சென்னை::புதுச்சேரி::புதுச்சேரி-கடலூர் இடையே காலை 7 மணி அளவில் தானே' புயல் கரையை கடந்தது புயல் : அடுத்த 24மணி நேரத்துக்கு கனமழை தொடரும்!
புதுச்சேரி:: புதுச்சேரி-கடலூர் இடையே காலை 7 மணி அளவில் 'தானே' புயல் கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது சுமார் 125 கி,மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி-கடலூர் இடையே கரையை கடந்த புயல் நிலப்பரப்புகளுள் புகுந்து, திருவண்ணாமலை வழியாக செல்கிறது. இதனால் திருவண்ணாமலை மற்றும் தருமபுரியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. புயல் கரையை கடந்தாலும் இதன் வேகம் இன்னும் குறையாமல் உள்ளது. புதுச்சேரி, சென்னை, கடலூர் போன்ற இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
அடுத்த 24மணி நேரத்துக்கு கனமழை தொடரும்!
புயல் கரையை கடந்தாலும் அடுத்த 12மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடலின் கொந்தளிப்பு குறையாததால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக, ஒரு சில இடங்களில் மின்சார துண்டிப்பும், போக்குவரத்துப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட ஒரு சில இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரவு முதல் கனமழை!
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில், புயல் காரணமாக நேற்றிரவு 8 மணி முதல் கன மழை பெய்து வருகிறது. கடும் காற்றும் வீசி வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
தி.நகரில் மரம் விழுந்து 4 கார்கள் சேதம்!
தானே புயல் காரணமாக நேற்று சென்னையில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர காற்று வீசியபடி இருந்தது. காற்றில் சிக்கி தியாகராயநகர் ராகவ அய்யர் ரோட்டில் 40 ஆண்டு பழமையான தூங்குமூஞ்சி மரம் வேரோடு சாய்ந்து விட்டது.
புழல் ஏரி திறக்கப்பட்டது!
சென்னைக்கு குடிநீர் வழக்கும் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. கனமழையால் புழல்ஏரி நிரம்பியதால் கரை உடைவதை தடுக்க உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 380 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுவையில் காற்றின் வேகம் அதிகரிப்பு!
புதுச்சேரி: கடலூர்- புதுச்சேரி இடையே புயல் கரையைக் கடப்பதால் இந்த பகுதியில் கனத்த மழை பெய்து வருகிறது. கடுமையான காற்றும் வீசி வருகிறது. இந்த பகுதியில் நேற்றிரவு 9 மணிக்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காற்றின் வேகத்தால் கடைகளின் பெயர்ப் பலகைகள் பறந்து சென்றன. மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.
தானே புயலால் புதுவையில் இருவர் பலி!
தானே புயலால் வீசும் பலத்த காற்றில் சிக்கி புதுச்சேரியில் இருவர் உயிரிழந்தனர். ராஜஉடையார் தோட்டத்தில் மேற்கூரை சரிந்ததில் அருள்ராஜ் என்பவர் உயிரிழந்தார். தாவீதுபேட்டையில் வீட்டின் சுவர் இடிந்ததில் ஜான்ஜோசப் என்பவர் உயிரிழந்தார்.
தானே புயல் காரணமாக ரயில்கள் ரத்து!
தென் மாவட்டங்களிலிருந்து வரும் அனைத்து ரயில்களும் தாமதமாக வந்து கொண்டிருக்கின்றன. தானே புயல் காரணமாக சென்னையையும் தென்மாவட்டங்களையும் இணைக்கும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தென்னக ரயில்வே அளித்துள்ள தகவல்படி , காலை மணி 8.20க்கு சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படுகிறது. காலை 9.20 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை வரும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
காலை 5.30 மணிக்கு பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வரும் ரயில் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதேபோல், காலை மணி 6.35க்கு சென்னையில் இருந்து பாண்டிச்சேரி புறப்பட்ட ரயில் செங்கல்பட்டுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
கனமழை : சீர்காழி போக்குவரத்து துண்டிப்பு!
கனமழை காரணமாக நாகை மாவட்டம் சீர்காழி மற்ற பகுதியிலிருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சீர்காழி சிதம்பரம், சீர்காழி மயிலாடுதுறை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை காரைக்கால் இடையேயும் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், அடுத்த 12 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவக் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
நடுக்கடலில் நின்ற சரக்கு கப்பலை புயல் கரைக்கு இழுத்து வந்தது: மெரீனாவில் தரை தட்டி நிற்கிறது!
தானே புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே அறிந்து சென்னை துறைமுகத்திற்கு வந்திருந்த 20 சரக்கு கப்பல்களை அதிகாரிகள் நேற்று நடுக்கடலுக்கு திருப்பி அனுப்பினர்.
இதன்படி சரக்கு ஏற்றி வந்த கப்பல்களும், சரக்குகளை இறங்கி நின்ற கப்பல்களும் நடுக்கடலில் நங்கூரம் இறங்கி நிறுத்தப்பட்டு இருந்தது.
இன்று காலை புயல் காற்று பலமாக வீசியதால் நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சரக்கு கப்பல் அலையில் மிதந்து கரைக்கு இழுத்து வரப்பட்டது. மெரீனா கடலில் நேப்பியர் பாலம் அருகே உள்ள மதகு பகுதியில் அந்த கப்பல் தரை தட்டி நிற்கிறது.
எம்.ஜி.ஆர். சமாதி, அண்ணா சமாதிக்கு வந்த பொதுமக்கள் கப்பல் தரை தட்டி நிற்பதை கூட்டம் கூட்டமாக நின்று பார்த்து செல்கின்றனர். காற்று அதிகம் வீசுவதால் கப்பலை கடலுக்குள் இழுக்க முடியவில்லை. இதனால் அங்கேயே கப்பல் நிற்கிறது. கடல் சீற்றம் தணிந்த பிறகே கப்பலை மீட்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment