Wednesday,December,14,2011இலங்கை::சமகால அரசியல், காத்தான்குடியின் அபிவிருத்தி தொடர்பாக மக்களுக்கு விளக்கும் பொதுக்கூட்டம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. நகரசபை சபைத் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியின் அபிவிருத்திகள் தொடர்பாகவும் சமகால அரசியல் தொடர்பாகவும் உரையாற்றினார் .
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவதற்கு அரசாங்கம் உடன்படுமாகவிருந்தால் நான் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவேன் என சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இரு மாகாணங்களும் இணைந்திருந்தபோது மூவின மக்களும் முட்டி மோதி இரத்த ஆறே ஓடியது. கிழக்கு பிரிக்கப்பட்டதையடுத்து இன்று அந்த மக்கள் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
வடக்கு கிழக்கை இணைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு இணைப்பதற்கு உடன்பட்டால் இந்த அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு இணைவது தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் அரசாங்கம் பங்குகொள்ளக்கூடாது. அவ்வாறு வடக்கு, கிழக்கு இணைப்புக்கு அரசாங்கம் உடன்படுமானால் அரசை விட்டும் வெளியேறுவோம். கிழக்கு மாகாணத்தில் இருக்கும் மூவின மக்களும் கிழக்கை நிர்வாகம் செய்து செழிப்புடன் இந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்துகொண்டிருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒருபோதும் இணைய விடமாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் சர்வதேச சமூகத்தினருக்கும் கூறிவைக்க விரும்புகின்றோம். அத்துடன் ஜனாதிபதிக்கும் அரச தரப்புக்கும் இதை தெளிவாகச் சொல்லி வைத்துள்ளோம்.
No comments:
Post a Comment