Tuesday, December 6, 2011

அரசாங்கத்துடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளை குழப்புவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது-சஜின் வாஸ் குணவர்தன!

Tuesday, December 06, 2011
அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து அரசாங்கத்துடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளை குழப்புவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வருவதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருதக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யதார்த்தத்தை புரிந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.ஏனைய இன சமூகங்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை ஆர்வம் காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்கக் கூடிய அணுகுமுறைகளை பின்பற்றுவதா அல்லது தொடர்ந்தும் மக்களுக்கு நெருக்கடிகளை கொடுப்பதா என்பதனை கூட்டமைப்பு தீர்மானிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஓர் அரசியல் தீர்வுத் திட்டத்ததை முன்வைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த காலத் தீர்வுத் திட்டங்களை காரணம் காட்டி, பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நிராகரிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்த நிறைவின் பின்னரே காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாபெரும் யுத்த வெற்றியை ஈட்டியதன் பின்னரும் நியாயமான அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்க வேண்டுமென்பதில் அரசாங்கம் தொடர்ந்தும் முனைப்பு காட்டி வருகின்றமை கவனிக்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமன்றி ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டது முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான மக்கள் நம்பிக்கை வலுவிழந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்காமையை நியாயப்படுத்தும் காரணிகளை கூட்டமைப்பு தேடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் ஆறு மாத காலத்திற்குள் நிரந்தரத் தீர்வு எட்டப்படும் என்ற அச்சம் காரணமாக, இதில் அங்கம் வகிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயங்குகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படுவதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment