Tuesday, December 06, 2011ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவிற்கு சார்பானவர் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
மாமனாரான முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவைப் போன்றே, ரணிலும் அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.
நீண்ட காலமாக ரணில் அமெரிக்காவுடன் உறவுகளைப் பேணி வருவதாகவும், அது அவர்களது குடும்ப வழக்கம் எனவும் தூதரக அதிகாரிகள் விபரித்துள்ளனர்.
1970 மற்றும் 1980 களில் இலங்கையை ஆட்சி செய்த ஜே.ஆர்.ஜயவர்தன அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வந்தார். (ஜே.ஆரை இடதுசாரி தரப்பினர் யான்கீ என அழைத்தனர், யான்கீ என்றால் அமெரிக்கப் பிரஜை என்று பொருள்)
2003ம் ஆண்டு மே மாதம் 29;ம் திகதி அமெரிக்கத் தூதுவர் ஆஷ்லி வில்ஸ் அனுப்பி வைத்த குறிப்பில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
செல்வந்த வர்த்தகக் குடும்பத்தில் பிறந்த ரணில் விக்ரமசிங்க, சுதந்திர முயற்சியான்மை நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டவர் எனவும், சோசலிச கொள்கைகளில் நம்பிக்கையற்றவர் எனவும் ஆஷ்லி வில்ஸ் விபரித்துள்ளார்.
அமெரிக்க அரசியல் மற்றும் வரலாறு பற்றி ரணில் விக்ரமசிங்கவிற்கு தெளிவு காணப்படுகின்றது. அமெரிக்க சிவில் யுத்தம், அமெரிக்க இராணுவ வரலாறு மற்றும் அரசாங்க நிர்வாகம் போன்ற தொடர்பில் கற்றறிந்து கொண்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்த சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம் குறிப்பாக அமெரிக்காவின் ஒத்துழைப்பு தேவை என்ற நிலைப்பாட்டில் ரணில் விக்ரமசிங்க இருந்தார் என அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூடுதல் முனைப்பு காட்டி வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment