Thursday,December 29, 2011இலங்கை::கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்ட சடலத்தையும் அதனுடன் கூட வந்த பதினொருபேரையும் காணவில்லையென சுன்னாகம் மற்றும் புளியங்குளம் பொலிஸ் நிலையங்களிலும் மனித உரிமைகள் ஆனைக்குழுவின் யாழ் அலுவலகத்திலும் முறையிடப்பட்டுள்ளது.
இச்சம்வம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
இந்தியாவில் உள்ள வைத்தியசாலையொன்றில் கடந்த 18 ஆம் திகதி மட்டக்களப்பை வாழ்விடமாகவும் ஏழாலையைப் பிறப்பிடமாகவும் கொண்ட க.தனஞ்சயன் (வயது-38) என்பவர் மரணம் அடைந்துள்ளார்.
இவருடைய சடலம் 19ஆம் திகதி நண்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமானம் மூலம் எடுத்து வரப்பட்டு அங்கிருந்து தனியார் வாகனத்தின் மூலம் யாழ்ப்பாணம் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஏழாலை மேற்கில் உள்ள ஒன்றுவிட்ட சகோதரியின் வீட்டில் மரணக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உறவினர்களுக்கும் மரண அறிவித்தல் தெரிவிக்கப்பட்டு பந்தல் போடப்பட்டு உரிய நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.
இந் நிலையில் 20ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் தாம் பிரேதத்துடன் ஓமந்தைக்கு வந்துவிட்டோம் என்று இறந்தவரின் சகோதரி ஏழாலையில் உள்ள உறவினர்களுக்கு கையடக்கத் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.
பின்னர் பகல் 11 மணியளவில் பனிக்கம் களத்தில் சடலம் கொண்டு வந்த வாகனத்தின் நான்கு சில்லுகளின் காற்றும் போன நிலையில் நிற்பதாகவும் வாகனத்தின் சில்லுகள் நான்கையும் ஒட்டிக்கொண்டு புறப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட நபர் தெரிவித்துள்ளார்.
உறவினர்கள் சடலமும் உறவுகளும் வருவார்கள் என்று காத்திருந்த வேளையில் மீண்டும் பிற்பகல் 5 மணியளவில் குறிப்பிட்ட சகோதரி வாகனத்தின் ரயர்கள் மாற்றி விட்டோம் வாகனம் ஸ்டார்ட் ஆகவில்லை. அதனைப் பார்த்துக்கொண்டு வருகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
இரவு முழுவதும் தொடர்புகள் எவையும் கிடைக்காத நிலையில் 21 ஆம் திகதி காலையில் தம்மை யாரோ சடலத்துடன் கடத்திச்சென்று காட்டில் வைத்திருப்பதாகத் தெரிவித்ததுடன் கையடக்கத் தொலைபேசியின் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏழாலையில் உள்ள உறவினர்கள் எடுத்த முயற்சிகள் எவையும் கைகூடாத நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலையம் சென்று தமது முறைப்பாட்டைத் தெரிவிக்க முற்பட்டுள்ளார்கள்.
சுன்னாகம் பொலிஸார் குறிப்பிட்ட முறைப்பாட்டை எடுக்க மறுத்ததுடன் அவர்களை புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்று முறையிடும் படியும் தெரிவித்துள்ளார்கள். இந் நிலையில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் குறிப்பிட்ட விடயம் உறவினர்களினால் முறையிடப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூலம் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்ட விடயம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் உதவி அத்தியட்சரின் கவனத்திற்கு கிராம அலுவலர்கள் கொண்டு வந்த நிலையில் உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்கு உதவிப் பொலிஸ் அத்தியட்சர் விடுத்த பணிப்புரையைத் தொடர்ந்து குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உரியவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பி;ட்ட வாகனத்தில் இறந்தவரின் மனைவியும் பத்து வயதுக்கு உட்பட்ட மூன்று பிள்ளைகள் திருகோணாமலை செயலகத்தில் அமைந்துள்ள நிக்கொட் நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலரான நிரஞ்சன் மற்றும் மனைவி மூன்று பிள்ளைகள் (பத்து வயதுக்கு உட்பட்டவர்கள்) சகோதரி உட்பட மற்றும் உறவினர் ஆகியோரே காணாமல் போயுள்ளவர்களாவர்.
சுமார் பத்து நாட்கள் கடந்த நிலையிலும் கூட குறிப்பிட்ட நபர்களுக்கோ அன்றி கொண்டுவரப்பட்ட சடலத்துக்கோ வாகனத்துக்கோ சாரதிக்கோ என்ன நடந்தது என்று தெரியாத நிலைமை உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவும் துன்பமாகவும் அமைந்துள்ளது. குறிப்பிட்ட வைத்தியரின் கணவர் இறந்தவரை கடந்த சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் வெட்டி படுகாயப்படுத்தியதன் தாக்கத்தினால் ஏற்பு வலி வந்த நிலையில் இந்தியாவுக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் இறந்தவரின் சகோதரியும் கணவரும் வைத்தியர்களாக இருந்த போதிலும் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் இறந்தவர் தனது சகோதரியானவருக்கு உதவியாக இருப்பது கணவருக்குப் பிடிக்காத நிலையில் ஏற்கனவே தாக்கப்பட்டதாகவும் இதன் பின்புலத்தில் இந்த சடலமும் உறவினர்களும் கடத்தப்பட்டதா என்ற சந்தேகமும் தற்போது உறவினர்களிடையே ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment