Saturday, December 3, 2011

ஆங்-சான்-சூச்சியைச் சந்தித்தார் ஹிலாரி!

Saturday, December 03, 2011
யாங்கூன்: மியான்மர் நாட்டில் 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், வெள்ளிக்கிழமை ஆங் சான் சூச்சியை
சந்தித்தார்.

மியான்மர் நாட்டின் ஜனநாயகப் போரளியும், நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூச்சி, ஹிலாரியை வரவேற்றார். இந்தச் சந்திப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த ஹிலாரி, ""இங்கு வந்திருப்பது மட்டுமல்ல, உங்கள் எல்லோரையும் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்ததையே எனக்குக் அளிக்கப்பட்ட மிகப் பெரிய மரியாதையாகக் கருதுகிறேன்'' என்றார்.

நீண்ட காலமாக உலக நாடுகளுடனான தொடர்பிலிருந்து சற்று ஒதுங்கியே இருந்த மியான்மருக்கு ஹிலாரி பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அந்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள அரசு, சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. அரசியல் கைதிகள் உள்ளிட்டோர் இப்போது விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் என்று நம்புவதாக ஹிலாரியும் நம்பிக்கை தெரிவித்தார். அரசியல் கைதிகள் விடுதலை, சீர்திருத்தங்கள் மேற்கொள்வது ஆகியவற்றில் ஏதேனும் சுணக்கம் ஏற்பட்டால், ஹிலாரியின் பயணத்தையடுத்து அந்நாட்டுக்கு அளிக்கப்படும் சிறு அளவிலான உதவிகள்கூட நிறுத்தப்படும் என்று அமெரிக்கத் தரப்பில் இருந்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் நேபிடோவில் மியான்மரின் உயர்நிலைத் தலைவர்களைச் சந்தித்த பின் கருத்துத் தெரிவித்த ஹிலாரி, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் வடகொரியாவுடனான உறவுகளையும் மியான்மர் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment