Wednesday, December 14, 2011

விவசாயிகள் மீது மீண்டும் தடியடி 50 இடங்களில் போராட்டம்!

Wednesday,December,14,2011
உத்தமபாளையம் : முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தேனி மாவட்டத்தில் போராட்டம் நாள்தோறும் பரவி வருகிறது. கேரள எல்லையை முற்றுகையிட சென்றதால் நேற்றும் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். 50 கிராமங்களில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். கடைகள் அடைக்கப்பட்டன.

உத்தமபாளையம், சின்னமனூர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள், பொதுமக்கள் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தேனி மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. கம்பத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன பேரணி நடத்தினர். போடியில் கட்டிட தொழிலாளர், பஞ்சு மெத்தை தொழிலாளர்கள், பெயிண்டர்கள் சங்கம், நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

நேற்றும் தடியடி: உசிலம்பட்டி, மேலூர், பாலார்பட்டி, சீலையம்பட்டி, கம்பம், கூடலூர், குள்ளப்பகவுன்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து நேற்று காலை 100க்கும் மேற்பட்ட டிராக்டர்கள், மினி லாரிகள், லாரிகள், மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டூவீலர்களில் குமுளி நோக்கி விவசாயிகளும், பொதுமக்களும் புறப்பட்டனர். இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் நடைபயணமாக சென்றனர். போராட்டக்காரர்கள் கேரளாவுக்கு எதிரான கோஷங்களுடன் குமுளி நோக்கி சென்றனர்.
இந்நிலையில் லோயர்கேம்ப் குருவனூத்து பாலத்தில் தென்மண்டல ஐஜி ராஜேஷ்தாஸ், திருப்பூர் எஸ்பி பாலகிருஷ்ணன் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது கேரளாவை கண்டித்தும், போலீசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். அப்போது ஐஜி, இதற்கு மேல் சென்றால் கேரள எல்லையில் துப்பாக்கியுடன் அம்மாநில போலீசார் காத்திருக்கின்றனர். அதனால் திரும்பி செல்லுமாறு வலியுறுத்தினர். சுமார் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு குமுளி மலைச்சாலையில் இருந்து போராட்டக்காரர்கள் திரும்பினர்.

சாக்குலூத்து மெட்டு: உத்தமபாளையம் அருகே உள்ள தேவாரம், மூணாண்டிபட்டி, லட்சுமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சுமார் 10 ஆயிரம் பேர் கேரள எல்லையான சாக்குலூத்து மெட்டுக்கு நேற்று காலை புறப்பட்டு சென்றனர். அவர்கள் கேரள எல்லைப்பகுதியில் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் மறியல் செய்தனர்.

தற்போது கேரளாவில் உள்ள தமிழர்கள் இவ்வழியாகத்தான் தப்பி வந்து கொண்டிருக்கின்றனர். இப்பகுதியிலும் பிரச்னை ஏற்பட்டால் அங்கிருக்கும் தமிழர்கள் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என போலீசார் தெரிவித்தனர். அதனால் இப்பகுதி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு திரும்பினர்.

தேனியில் தடியடி: தேனி நேரு சிலை அருகே உள்ள மளிகை கடையில் இருந்து கேரளாவிற்கு பொருட்கள் அனுப்புவதாக கூறி அங்கிருந்த வாகனங்களை தாக்கி சேதப்படுத்தினர். இதனால் மதுரை, பெரியகுளத்தில் இருந்து தேனி வந்த வாகனங்கள் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுந்து நின்றன. நிலைமையை சமாளிக்க போலீசார் தடியடி நடத்தினர்.

சுவர் எழுப்ப முயற்சி: போடியிலிருந்து போடிமெட்டு வழியாக மூணாறுக்கு செல்லும் சாலை உள்ளது. இப்பகுதியில் கடந்த 9 நாட்களாக போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் போடி உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள், கேரள எல்லையான போடி மெட்டு சாலையின் குறுக்கே சுவர் எழுப்புவதற்காக செங்கல், மணல், சிமென்ட் உள்ளிட்டவற்றுடன் புறப்பட்டு சென்றனர். மேலும் பலர் அங்கு தங்கி சமைத்து சாப்பிடுவதற்காக வாகனங்களில் சமையல் பாத்திரம், அரிசி, காய்கறிகளுடன் சென்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் போரட்டக்காரர்கள் போடியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான ஸ்பைசஸ் போர்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போலீசை நோக்கி மாடுகளை விரட்டினர்

கூடலூர் பகுதியில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். போராட்டக்காரர்கள் நீண்ட நேரம் போராடியும் போலீசாரை மீறி செல்லமுடியவில்லை. அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த மாடுகள் கூட்டத்தை போலீசாரை நோக்கி ஓட்டிவிட்டனர். ஒரே நேரத்தில் ஏராளமான மாடுகள் ஓடிவந்ததால் திணறிய போலீசார், மாடுகளுக்காக வழிவிட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போராட்டக்காரர்கள், போலீசாரை தாண்டி கூடலூரில் இருந்து லோயர்கேம்ப் நோக்கி முன்னேறினர்.

No comments:

Post a Comment