Thursday,December 29, 2011திருச்சி : ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா பாதுகாப்புக்கு 4,000 போலீசார் ஈடுபடுத்தப்பட இருப்பதாக போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 25ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ஜனவரி 5ம் தேதி நடக்கிறது. விழாவிற்கான முன்னேற்பாடு குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் முனுசாமி தலைமை வகித்தனர்.
ஜனவரி 4, 5, 6 ஆகிய 3 நாட்கள் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் சப்ளை, 21 இடங்களில் தற்காலிக நவீன கழிவறை, 4 தற்காலிக மருத்துவ முகாம், கோயில் வளாகத்தை சுற்றி 3 தீயணைப்பு வாகனம், அம்மா மண்டபத்தில் தயார் நிலையில் நீச்சல் வீரர்கள், மிதவை படகுகள், 50 சிறப்பு பஸ்கள், தடையில்லா மின்சாரம் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து கூறுகையில், “வைகுண்ட ஏகாதசி நாளில் 9 எஸ்பி, 16 ஏடிஎஸ்பி உட்பட 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பக்தர்களுக்கு உதவுதல், திருட்டை தடுத்தல், விஐபிக்கள் பாதுகாப்பு, சீரான போக்குவரத்து போன்ற 4 அம்ச திட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு இருக்கும். தேவைக்கேற்ப கூடுதல் போலீசாரும் பயன்படுத்தப்படுவர்“ என்றார்.
மாநகராட்சி கமிஷனர் வீரராகவராவ் மேலும் கூறுகையில், “பிளாஸ்டிக் பை, டம்ளர், பாக்கெட் வாட்டர் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வந்து கொடுத்தால் அவர்களுக்கு ஒரு கூப்பன் வழங்கப்படும். அந்த கூப்பனை குலுக்கி அதில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிக்கு தங்கக்காசு மற்றும் வெள்ளிக்காசு பரிசாக வழங்கப்படும்“ என்றார்.
No comments:
Post a Comment