Thursday, December 29, 2011

கரூரில் நாய்க்கு மயக்க பிஸ்கட் கொடுத்து 3 பெண்கள் கொலை!

Thursday,December 29, 2011
கரூர்: கரூரில் பைனான்சியர் மனைவி, மகள், பேத்தியை கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்றுவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற கும்பலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கரூர் வெண்ணைமலை அன்னபூர்ணா கார்டன் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (55). கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். மாதம் ஒருமுறை அல்லது இருமுறை வீட்டுக்கு வந்து செல்வார். வீட்டில் அவரது மனைவி கல்யாணி (50), மூன்றாவது மகள் கலையரசி (22) வசித்து வந்தனர்.

இரண்டாவது மகள் உமாராணி (30), கணவர் பூபதி மற்றும் மகள் கார்ணிகா (5)வுடன் நேற்று முன்தினம் வெண்ணைமலைக்கு வந்தார். நேற்று காலை, சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு பூபதியும் உமாராணியும் பூலாம்வலசுக்கு சென்றுவிட்டனர். மாலை 4 மணிக்கு மாமியார் வீட்டுக்கு பூபதி போன் செய்தார். நீண்ட நேரமாக போனை யாரும் எடுக்காததால் சந்தேகம் அடைந்த பூபதி, மனைவியுடன் நேற்று மாலை மீண்டும் மாமியார் வீட்டுக்கு வந்தார். பெட்ரூமில் மாமியார் கல்யாணி கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

அவரது கைகள் கட்டப்பட்டு, வாயில் துணி வைக்கப்பட்டிருந்தது. கட்டிலுக்கு கீழே கார்ணிகா கொலை செய்யப்பட்டு கிடந்தாள். அவளது கழுத்தும் அறுக்கப்பட்டு இருந்தது. பாத்ரூம் அருகே கலையரசியும் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார். 3 பெண்களும் அணிந்திருந்த சுமார் 20 பவுன் நகைகளை காணவில்லை. கொலையாளிகளை பார்த்து கலையரசி தப்பி ஓடி குளியல் அறையில் ஒளிந்திருக்கிறார். கதவை உடைத்து அவரை வெளியே இழுத்து வந்த கும்பல், கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது. கலையரசி இன்ஜினியரிங் முடித்து விட்டு சில மாதங்களாக பெங்களூரில் வேலை செய்து வந்தார். அவருக்கு திருமண ஏற்பாடு நடந்து வந்ததால் வீட்டுக்கு வந்திருந்தார்.

பூபதி கொடுத்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எஸ்.பி. நாகராஜன், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். கொலை நடந்த வீட்டில் நாய் வளர்க்கப்படுகிறது. அந்த நாய் நேற்று மாலை வரை சரியாக குரைக்கவே இல்லை. கொலையாளிகள் மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டை நாய்க்கு போட்டு விட்டு வீட்டுக்குள் வந்திருக்கலாம் என தெரிகிறது. நகைக்காக கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 20 நாட்களுக்கு முன்பு இதேபாணியில் நாமக்கல் அருகே 3 பெண்கள் கொலை செய்யப்பட்டனர். அதே கும்பல்தான் இந்த கொலையிலும் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment