Sunday, December 11, 2011

வலுவான லோக்பால் மசோதாவுக்காக 3வது முறையாக அன்னா ஹசாரே உண்ணாவிரதம்!

Sunday, December 11, 2011
புதுடெல்லி:: வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டெல்லியில் 3வது முறையாக இன்று உண்ணாவிரதம் இருக்கிறார். ஊழலுக்கு எதிராக கடுமையான லோக்பால் மசோதா நிறைவேற்ற வேண்டும் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே போராடி வருகிறார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் 5 நாள் உண்ணாவிரதம் இருந்தார். லோக்பால் கூட்டுக் குழுவை மத்திய அரசு அமைத்ததை தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிட்டார். பின்னர் அதே மாதம் ராம்லீலா மைதானத்தில் 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவரது சில கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதையடுத்து தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். இதையடுத்து கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில், அரசு உருவாக்கிய லோக்பால் மசோதா, அன்னா ஹசாரேவின் லோக்பால் மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டரை மாதங்கள் ஆய்வுக்கு பிறகு, தனது அறிக்கையை நாடாளுமன்ற நிலைக்குழு நேற்று முன்தினம் தாக்கல் செய்தது. இதில், பிரதமரை லோக்பால் வரம்புக்குள் சேர்ப்பதை நாடாளுமன்றத்தின் முடிவுக்கு விட்டுவிடுவது, கடைநிலை ஊழியர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் கீழ் கொண்டுவருவது உள்ளிட்ட பரிந்துரைகள் செய்ய்பபட்டிருந்தன.
லோக்பாலுக்குள் பிரதமர், கடைநிலை ஊழியர்களை கொண்டு வர வேண்டும் என்று குரல் கொடுத்து வரும் அன்னா இந்த அறிக்கையால் அதிருப்தி அடைந்தார். ‘மத்திய அரசு மக்களை முட்டாளாக்கி விட்டதுÕ என்று விமர்சித்த அன்னா, மத்திய அரசின் லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஒருநாள் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். இதற்காக நேற்று மகாராஷ்டிராவில் இருந்து டெல்லி வந்தார். இன்று காலை 9 மணி அளவில், டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் சிறிதுநேரம் தியானம் செய்தார். அன்னாவின் நெருங்கிய உதவியாளர்கள் மணீஷ் சிசோடியா, அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் கிரண் பெடி ஆகியோரும் உடனிருந்தனர். பின்னர் அங்கிருந்து காலை 10.15 மணி அளவில் உண்ணாவிரதம் நடக்கும் ஜந்தர் மந்தருக்கு வந்தார். ‘நான் உண்ணாவிரதம் தொடங்குகிறேன். இப்போது அதிகம் பேச மாட்டேன். பாரத் மாதா கீ ஜே, வந்தே மாதரம்‘ என்று கூறிவிட்டு உண்ணாவிரதத்தை தொடங்கினார். அங்கு தேசிய கொடியுடன் ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர். அன்னாவின் நெருங்கிய உதவியாளர்கள் அர்விந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் மற்றும் குமார் விஸ்வாஸ் ஆகியோரும் உண்ணாவிரதம் இருந்தனர்.
இன்று ஒருநாள் உண்ணாவிரதத்தோடு, லோக்பால் பற்றிய பொது விவாதத்துக்கும் அன்னா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதில் முக்கிய கட்சிகள் பங்கேற்க உள்ளதாகவும், இந்த அழைப்பை காங்கிரஸ் மறுத்து விட்டதாகவும் அவர்கள் கூறினர்.
நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் வலுவான லோக்பாலை நிறைவேற்றாவிட்டால் வரும் 27ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அன்னா ஹசாரே ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment