Monday, December 26, 2011

காரைக்குடி- பிரதமருக்கு எதிராக மதிமுக பேரணி-தமுமுகவினர் கருப்புக் கொடி-300 பேர் கைது!

Monday,December, 26,2011
காரைக்குடி: காரைக்குடியில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தொண்டர்கள் 300 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல பிரதமரைக் கண்டித்து பேரணி நடத்திய மதிமுகவினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை தீர்க்க முயற்சிக்காத பிரதமரைக் கண்டித்து இன்று பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கருப்புக் கொடி போராட்டத்தை அறிவித்திருந்தன. ஆனால் இதை தமிழக போலீஸார் கடும் பிரயத்தனப்பட்டு முறியடித்துள்ளனர்.

சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை போராட்டத்திற்காக புறப்பட்டவுடனேயே மடக்கி கைது செய்து கொண்டு சென்று விட்டனர். தேமுதிகவினரையும் அவர்கள் ஆங்காங்கே மடக்கிப் பிடித்தனர்.

இந்த நிலையில் பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்ட காரைக்குடியில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த 300 பேர் திரண்டிருந்தனர். தடையை மீறி கருப்புக் கொடி காட்ட முயன்ற அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

மதிமுகவினர் பேரணி

இதேபோல மதிமுக சார்பில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மதிமுகவினர் இன்று காரைக்குடியில் பேரணி நடத்தினர்.

ஐந்து முல்லைப் பெரியாறு பாசன மாவட்ட செயலாளர்களுடன் மதிமுகவினர் தேவர் சிலையிலிருந்து பேரணியாக கிளம்பினர். ஆனால் அவர்களை பெரியார் சிலை அருகேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கேயே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

No comments:

Post a Comment