Sunday, December 11, 2011கம்பம்:: தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து இன்றும் 25 ஆயிரம் பேர் கேரள மாநிலத்திற்கு படையெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் இருந்து 7ஆயிரம் பேர் குமுளி நோக்கி நேற்று ஊர்வலமாக புறப்பட்டனர். வழிநெடுகிலும் உள்ள ஊர்களில் இருந்து ஏராளமானோர் அவர்களுடன் சேர்ந்தனர். சுமார் 50 ஆயிரம் பேர் வரை திரண்டு கூடலூரை தாண்டி கேரளாவை நோக்கி படையெடுத்தனர். மக்களின் எழுச்சியை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். தேனி கலெக்டர் பழனிச்சாமி, ஐஜி ராஜேஷ்தாஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் லோயர்கேம்ப் அருகே அவர்களை மறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நடந்தது.
கேரளா செல்லும் அனைத்து வழித்தடங்களையும் அடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து அரசுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் திரும்பினர். இதற்கிடையில், தமிழக மக்கள் படையெடுத்து வருவதை அறிந்து குமுளியில் துப்பாக்கிகளுடன் கேரள போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கம்பம் அருகே உள்ள அணைப்பட்டி, காமையகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, ராயப்பன்பட்டி பகுதிகளை சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் திடீரென கேரள எல்லையான குமுளி நோக்கி இன்று காலை புறப்பட்டனர். வழியில் ஆங்காங்கே கேரள முதல்வர் உம்மன்சாண்டியின் உருவபொம்மையை கொளுத்தி கோஷமிட்டனர். கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களும், கூடலூர் வழியாக குமுளி நோக்கி புறப்பட்டனர். இரு வழித்தடங்களிலும் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கட்டுக்கடங்காமல் புறப்பட்டு சென்றதால், அவர்களை தடுக்க முடியாமல் போலீசார் திணறினர். குமுளி எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
குமுளியில் தொடர்ந்து பதற்றம் : 5 ஆயிரம் போலீசார் குவிப்பு!
கம்பம்::முல்லை பெரியாறு அணையை காப்போம்’ என்ற கோஷத்துடன் தேனி, கம்பம் பகுதிகளில் இருந்து கேரள எல்லையை நோக்கி கூட்டம் கூட்டமாக மக்கள் 2வது நாளாக இன்றும் புறப்பட்டு சென்றதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. எல்லையில் 6 மாவட்டங்களை சேர்ந்த 5,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முல்லை பெரியாறு பிரச்னை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்நிலையில், புதிய அணை கட்டும் தீர்மானத்தை கேரள சட்டசபை நேற்று முன்தினம் நிறைவேற்றியது பதற்றத்தை அதிகரித்துள்ளது. அணையை காப்போம் என்ற கோஷத்துடன் தேனி, கம்பம் பகுதிகளில் இருந்து குமுளி நோக்கி 50 ஆயிரம் பேர் திரண்டு சென்றனர். கம்பம் அருகே உள்ள கிராமங்களில் இருந்து இன்றும் பல ஆயிரக்கணக்கான மக்கள் குமுளி நோக்கி புறப்பட்டனர்.
கூடலூர் வழியாகவும் 25 ஆயிரம் பேர் குமுளி நோக்கி புறப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது. தென்மண்டல ஐஜி ராஜேஷ்தாஸ் தலைமையில் திண்டுக்கல், நெல்லை, தேனி உள்பட 6 மாவட்ட எஸ்பிக்கள், 6 ஏடிஎஸ்பிக்கள், தேனி, மதுரை, திண்டுக்கல், நெல்லை, சேலம் மாவட்ட போலீசார் மற்றும் ஈரோடு சிறப்பு அதிரடிப்படை உள்பட 5 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் தமிழக எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
10க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள், தண்ணீர் பீய்ச்சும் 5 வஜ்ரா வாகனங்கள், 3 கண்ணீர் புகை வாகனங்கள், 15க்கும் அதிகமான ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. எல்லை பகுதியை தேனி கலெக்டர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். தேனி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. விருதுநகர் பாவாலி சாலையில் இன்று அதிகாலை கேரள சரக்கு லாரி ஒன்று எரிக்கப்பட்டது.
குமுளி எல்லை வழியாக கேரளாவுக்குள் நுழைந்த தமிழர்கள் மீது சிலர் கல்வீசி தாக்கினர். ரோசாப்பூ கண்டம் என்ற இடத்துக்குள் நுழைந்த தமிழர்களை கேரள மக்கள் சிலர் சுற்றிவளைத்து தாக்கினர். இதில் ஒருவரது மண்டை உடைந் தது. தமிழக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீட்டனர். கேரளாவுக்குள் அத்துமீறி நுழைவோரை கண்டதும் சுட இடுக்கி எஸ்.பி. ஜார்ஜ் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார். குமுளியில் துப்பாக்கியுடன் நூற்றுக்கணக்கான கேரள போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment