Saturday, December 03, 2011சிர்சா : அரியானா மாநிலம், சிர்சா அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் - 21 ரக விமானம் ஒன்று வயலில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், பைலட் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அரியானா மாநிலம், சிர்சா விமானப்படை தளத்தில் இருந்து நேற்று புறப்பட்டு, பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் - 21 ரக விமானம் ஒன்று, மானியா கிராமத்தின் வயல் வெளியில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்து வெளியே குதித்ததால் பைலட் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுபற்றி விமானப்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிர்சாவில் இருந்து 35 கி.மீ., தூரத்தில் மானியா கிராமத்தின் மீது பறந்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக, விமானம் அருகில் உள்ள வயல் வெளியில் விழுந்து நொறுங்கியது. விபத்தில் பைலட் உயிர் தப்பினார். விபத்து குறித்து விசாரணை செய்யப்பட உள்ளது. விசாரணையின் இறுதியில் தான் விபத்திற்கான காரணம் தெரியவரும்' என்றார்.
கடந்த 1960ம் ஆண்டிற்குப் பின், இந்திய விமானப்படையில் 976 மிக் 21 ரக போர் விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில், பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள், விபத்தில் நொறுங்கியுள்ளன. இந்த ஆண்டில் மட்டும், ஏழு மிக் 21 ரக விமானங்கள் விபத்திற்குள்ளாகியுள்ளன.
No comments:
Post a Comment