Tuesday, December,27, 2011மீஞ்சூர்:சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி வள்ளலார் நகர் பெரியதோப்பு பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (வயது 68). இவர் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் ஓட்டலும், பல்பொருள் அங்காடியும் நடத்தி வந்தார். இவருக்கு ஜெயஜோதி என்ற மனைவியும், ஜெயத்துரை, ஆசீர், கனகராஜ், தங்கராஜ் ஆகிய 4 மகன்களும், பாக்கியமணி என்ற மகளும் இருந்தனர்.
சுந்தரபாண்டியனின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் இட்டமொழி ஆகும். குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பே சென்னைக்கு குடிவந்தார். கடின உழைப்புக்கு பின்னர் வாழ்க்கையில் உயர்ந்த அவர் தனது மகன்கள்-மருமகள்கள் மற்றும் பேரன்-பேத்திகள் என அனைருவடனும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார்.
கிறிஸ்தவ மதத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை தனது குடும்பத்தினர் மற்றும் கடை ஊழியர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் நாளன்று சுந்தரபாண்டியனின் மகன் ஜெயத்துரையின் 6 வயது மகள் ஜூலியட்டுக்கு கும்மிடிப்பூண்டி சி.எஸ்.ஐ. ஆலயத்தில் ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் விழாவுடன் பேத்தியின் ஞானஸ்தான விழாவும் சேர்ந்து வந்த மகிழ்ச்சியை கொண்டாட அவர் குடும்பத்தினருடன் பழவேற்காடு ஏரிக்கு சுற்றுலா சென்றார். அவருடன் கடை ஊழியர் அனிதா (20), (முன்னாள் ஊழியர்) நசீராபானு ஆகியோரும் சென்றனர்.
நசீராபானுவின் கணவர் அன்சாரி ஏற்பாடு செய்த படகில் அவர்கள் பழவேற்காடு ஏரிக்கு சென்றனர். அன்சாரி படகை ஓட்டினார். அவர்கள் படகில் பழவேற்காடு ஏரிக்கு சென்று விட்டு மீண்டும் கரைக்கு திரும்பும் போது படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுந்தரபாண்டியனின் குடும்பத்தினர் உள்பட 22 பேர் பலியானார்கள். இதில் சுந்தரபாண்டியனின் மகன் ஜெயத்துரையின் மகன்கள் ஜனகராஜ் (13), பால்தினகரன் (10) மற்றும் பவுல்ராஜ் (13) என்ற 3 சிறுவர்கள் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் உள்ளூர் மக்கள் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை வரை 13 உடல்கள் மீட்கப்பட்டன. காணாமல் போன உடல்களை மீட்கும் பணியில் நேற்று காலை ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டது.
கடலோர காவல் படையினரும், கப்பல் படை நீச்சல் வீரர்களும் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று 8 உடல்கள் மீட்கப்பட்டன. அனிதா என்ற ஒரு பெண்ணின் பிணம் மட்டும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரது உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிவடைந்தவுடன் உடனுக்குடன் உடல்கள், தமிழக அரசு ஏற்பாடு செய்து இருந்த சிறப்பு அமரர் ஊர்திகளில் போலீஸ் பாதுகாப்புடன் கும்மிடிப்பூண்டிக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அந்த உடல்களை பைபாஸ் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் ஒருசில நிமிடம் வைக்கப்பட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது. அதன் பின்னர் உடல்கள் அதே வாகனத்தில் கோரிமேடு சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டன. அங்கு 20 சவக்குழிகள் ஒரே வரிசையாக தோண்டப்பட்டு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.
ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-
சுந்தரபாண்டியன் (68), அவரது மனைவி ஜெயஜோதி (60), மகன்கள் ஜெயத்துரை (45), அவரது மனைவி சுந்தரமேரி (41), ஆசீர்வாதம் (38), அவரது மனைவி ஜான்சி (31), கனகராஜ் (35), அவரது மனைவி பியூலா (28), சாமூவேல்தங்கராஜ் (33), அவரது மனைவி வசந்தா எப்சி, சுந்தரபாண்டியனின் மகள் பாக்கியமணி (40), அவரது கணவர் டேனியல் (45), பேரக்குழந்தைகள் ரோசிலீன் மேரி (13), மெர்லீன் (8), சார்லஸ் (6), ஜோஸ்வா (4), இமானுவேல் (1), ஜூலியட் (6 மாத பெண் குழந்தை), கோவில்ராஜ் (16), மனோஜ் (12). சுடுகாட்டிற்கு பொது மக்களும், வியாபாரிகளும் கூட்டம், கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
ஏராளமான பெண்கள் சுற்றி நின்று கதறி அழுதனர். கும்மிடிப்பூண்டி வட்டார நாடார்கள் உறவின்முறை நிர்வாகிகள் முன்னின்று இறுதி சடங்குளை செய்தனர். தமிழ்நாடு நாடார் சங்க பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன், வியாபாரிகள் சங்க தலைவர் வெள்ளையன், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. சி.எச்.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. கும்மிடிப்பூண்டி கி.வேணு உள்பட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment