Saturday,December,31,2011இலங்கை::போரின் இறுதிக்கட்டத்தில் 1200 பொதுமக்கள் இராணுவத்தினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டது உண்மையே என்று சிங்கப்பூரைத் தளமாக கொண்ட, தீவிரவாத ஆய்வு மற்றும் அரசியல் வன்முறைகள் குறித்த அனைத்துலக நிலையத்தின் தலைவர் பேராசிரியர் றொகான் குணரட்ண தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய புலமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் 'வெளிநாட்டு மண்ணில் புலிகளைத் தோற்கடித்தல்' என்ற பொருளில் நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்:-
போரின் இறுதிக்கட்டத்தில் 7000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சில அமைப்புகள் சொல்கின்றன. வேறு சில அமைப்புகளோ 10,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுகின்றன. இன்னும் சில தனிநபர்கள் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகச் சொல்கின்றன. ஆனால் எந்த அமைப்பிடமும் கொல்லப்பட்ட பொதுமக்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இல்லை.
உண்மையில், ஜனவரி 2009 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் 1400 பொதுமக்களே கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் புலிகளின் மீது, அவர்களின் நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எவ்வாறாயினும் 1200 பொதுமக்களினதும் மரணங்களுக்கு இலங்கைப் படையினரே பொறுப்பு எனவும் பேராசிரியர் றொகான் குணரட்ண தெரிவித்துள்ளார்.
ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கப் படையினர் பங்கேற்ற படை நடவடிக்கைகளில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டது மிகமிகக் குறைவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் மூன்று முக்கியமான தவறுகளை இழைத்துள்ளதாக பேராசிரியர் றொகான் குணரட்ண தெரிவித்துள்ளார்.
ஒரு மோதலின் முடிவில், ஒரு சில மாதங்களுக்குள் உண்மையான இழப்பு விபரங்களுடன் கூடிய வெள்ளை அறிக்கை ஒனறு சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். போர் முடிவுக்கு வந்ததும் இலங்கை அரசாங்கம் ஒரு வெள்ளை அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்காமை முதலாவது தவறு என சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கத் தாமதித்த காலப்பகுதியில், புலிகள் மதிப்புமிக்க அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளை தம் பக்கம் இழுத்துக் கொண்டு விட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசு செய்த இரண்டாவது தவறு, ஐ.நா நிபுணர்குழுவை அழைக்காதது.
அந்தக் குழுவை கொழும்புக்கு அழைத்து உண்மையான தகவல்களை வழங்கி, நிலைமையை நேரில் பார்வையிட அனுமதித்திருந்தால், அந்தக் குழு தவறான தகவல்களுடன் கூடிய அறிக்கையைச் சமர்ப்பித்திருக்காது. அவர்களை அனுமதிக்க மறுத்ததால், ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை ஒரு பக்கத் தகவல்களை மட்டுமே கொண்டதாக வெளியானது.
மேலும், மூன்றாவதாக, தவறான செய்திகளை முறியடிக்கும் பொறுப்பை நிறைவேற்ற இலங்கை வெளிவிவகார அமைச்சு தவறிவிட்டது. பாதுகாப்பு அமைச்சு, தகவல் ஊடக அமைச்சுடன் இணைந்து, புலிகளின் பரப்ரைகளை முறிடிக்க வேண்டிய பொறுப்பை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு மேற்கொள்ளவில்லை என பேராசிரியர் றொகான் குணரட்ண தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக புலிகள் சார்பு அமைப்புகள் சொல்வதை இப்போதும் பலரும் நம்புகிறார்கள்.
புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரே இலங்கை அரசாங்கம் மேற்கு நாடுகளுடன் கொண்டிருந்த சிறப்பான உறவு சீர்குலைந்தமை குறிப்பிடத்தக்கது.குறிப்பாக பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் கடந்த காலங்களில் இருந்த மிகச்சிறந்த உறவு இப்போது இல்லை.
போரின் இறுதிகட்டத்தில் உண்மையில் என்ன நடந்தது என்று சரியாக விளக்கமளிக்கப்படாததால், புலிகள் சார்பு அமைப்புகள் சொல்வதை குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சுகளும், அரசார்பற்ற நிறுவனங்களும் நம்புகின்றன என்றுபேராசிரியர் றொகான் குணரட்ண மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment