Saturday, December 31, 2011

தானே புயலின் எதிரொலி : தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலான மழை!

Saturday,December,31,2011
திண்டுக்கல்::தானே புயலின் எதிரொலியாக தமிழக கடலோர மாவட்டங்களில் மட்டுமின்றி, திண்டுக்கல், கரூர் போன்ற உள்மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று பலத்த காற்றுடன் அவ்வப்போது மழை பெய்தது.

ஊட்டி மத்திய பேருந்து சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் இணைந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். கரூர் மாவட்டத்தில், தானே புயலின் தாக்கத்தால் நாள் முழுவதும் லேசான மழை பெய்தது. மாலை நேரத்தில் கனமழை பெய்ததால், அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனிடையே, தானே புயலின் காரணமாக சென்னை அருகே உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என அதன் இயக்குனர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழக கடலோரப் பகுதியைக் கடந்து கேரளாவை நோக்கி தானே புயல் நகர்வதால், உள் மாவட்டங்களில் இன்று மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment