Monday, December 12, 2011

2003-ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு: 3 பேர் தூக்கு தண்டனை உறுதி செய்யப்படுமா?; இன்று மாலை தீர்ப்பு!

Monday, December 12, 2011
மும்பை::மும்பையில் கடந்த 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ந் தேதி கேட்வே ஆப் இந்தியா மற்றும் ஜவேரி பஜார் ஆகிய 2 இடங்களில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 53 பேர் பலியானார்கள்.

மும்பை தீவிரவாத தடுப்பு படை போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி அஸ்ரத் அன்சாரி, ஹனிப் சையத், அவரது மனைவி பெமிதா சையத் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் பாகிஸ்தானின் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

சம்பவத்தன்று 3 பேரும் 2 கார்களில் வெடிகுண்டுகளை நிரப்பி வெடிக்கச் செய்து நாசவேலையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. 3 பேர் மீதும் மும்பை பொடா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவர்களுக்கு 2003 இரட்டை குண்டு வெடிப்பு தவிர 2002-ல் நடந்த குண்டு வெடிப்பு, 2003-ல் காட்கோபர் குண்டு வெடிப்பு சம்பவத்திலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேருக்கும் பொடா கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. 3 பேரும் லஸ்கர்-இ-தொய்பா இயக்க தீவிரவாதிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் திட்டமிட்டு குண்டு வெடிப்பை நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளதால் 3 பேருக்கும் அதிகபட்சமாக தூக்குதண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

கடந்த 2009-ல் இந்த தீர்ப்பு வழங்கியது. தூக்கு தண்டனை என்பதால் தீர்ப்பை மும்பை ஐகோர்ட்டு உறுதிப்படுத்த வேண்டும். இதையடுத்து மும்பை ஐகோர்ட்டு வழக்கை மீண்டும் விசாரித்தது. இந்த வழக்கின் தீர்ப்பை 12-ந் தேதிக்கு (இன்று) நீதிபதி தள்ளிவைத்தார்.

அதன்படி இன்று பிற்பகல் 2.45 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது 3 பேர் தூக்கு தண்டனை உறுதிப்படுத் தப்படுமா? அல்லது ஆயுள்தண்டனையாக குறைக்கப்படுமா என்பது தெரிய வரும்.

No comments:

Post a Comment