Sunday, November 6, 2011

வெற்றி தோல்வியில்லாத TNA யின் அமெரிக்க பயணம் உள்நாட்டில் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குமா?:பிரமுகர்களின் கருத்துக்களை வாசகர்களுக்காகத் தருகின்றோம்!

Sunday, November 06, 2011
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் அமெரிக்காவிற்குச் சென்று தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அங்கு கலந்துரையாடியு ள்ளனர். இவர்களது இவ்விஜயம் தொடர்பாக உள்நாட்டில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், சில முக்கியமான பிரமுகர்களின் கருத்துக்களை வாசகர்களுக்காகத் தருகின்றோம்.

அமைச்சர் விமல் வீரவன்ச

இலங்கையின் பிரிவினைவாதத்தையே இலக்காகக் கொண்டு செயல்படும் சில தமிழ் அரசியல்வாதிகள் ஒஸ்லோவுக்கும் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் சென்று இலங்கை அரசுக்கு எதிராக பிரயத்தனம் மேற்கொள்ளும்படி அந்த நாடுகளில் உள்ள அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றனர்.

ஜனாதிபதி இலங்கையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் போது, பிரபா கரனை காப்பாற்றுவதற்காகவும் யுத்தத்தை இடைநடுவில் நிறுத்துவதற்கும் மேற்படி நாடுகள் இலங்கை அரசுக்கும் ஜனாதி பதிக்கும் பல பிரயத்தனங்களை மேற் கொண்டன.

எதற்கும் அடிபணியாத ஜனாதிபதி ஒரே அடியில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

தற்பொழுதும் உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் இலங்கையை பிரித்து ஆள்வதற்கு எத்தனிக்கும் எவ்வித முயற்சிகளையும் ஜனாதிபதியும் அரசும் முறியடிப்பதற்கு ஒரு போதும் தயங்கப் போதில்லை. தற்பொழுது வெளிநாட்டில் வாழும் தமிழ் பிரிவினைவாதிகள் தாம் வாழும் நாடுகளில் சொகுசாக வாழ்ந்து கொண்டு இலங்கையின் பிரிவினைக்கு எதிராக கோஷம் எழுப்புகின்றனர். இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சி யையும் ஜனாதிபதி முறியடிப்பார்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண் டுள்ள சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள் குழுவினரை அமெ ரிக்க இராஜாங்க செயலர் ஹிலாரி கிளின்டன் சந்திக்காமை வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும்.

இலங்கை வாழ் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஏற்க முடியாது. சர்வதேச அழுத்தங்களின் போது இந்தியா தொடர் ந்தும் இலங்கைக்கு உதவுகிறது. எனவே அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளின் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் வெற்றியைப் பெற்றுத்தரப் போவதில்லை.

பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத்

தமிழ் கூட்டமைப்பு இனப்பிரச்சினைத் தீர்வு குறித்த ஒரு முயற்சியாக அமெரிக்கா சென்றுள்ளது. முஸ்லிம்களையும் அரவணைத்துப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமெனவும் கருத்து வெளியிட் டுள்ளனர். தந்தை செல்வா முதல் இன்றுள்ள தமிbழ ஜனநாயக அரசியல் வாதிகள் வரை இந் தக் கூற்று கூறப்பட்டே வருகின்றது.

ஆனால் ஆக்கபூர்வமான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எல்லாம் காற்றில் கலந்து ஒன்றாகவே போய்விடுகின்றது. தென்கிழக்கு அலகுக் கோரிக்கையையும் தமிழ்த் தலைமைகள் ஏற்றுக் கொண்டிருந்தமை முன்னைய வரலாறு, எனினும், பொதிகளை ஆக்கும் போது முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டே போய்விடுகின்றனர். தமிழ் கூட்டமைப்பை நாம் இரண்டு கூறுகளாக வகைப்படுத்த முடியும்.

புலிகள் கோலோச்சி காலத்திலிருந்த கூட்டமைப்பு வேறு, புலிகள் அழிந்த பின்னர் இருக்கும் கூட்டமைப்பு வேறு. தற்போதைய கூட்டமைப்பு சாத்தியமான வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். முஸ்லிம் தலைமைகளுடன் இணைந்து சாத்தியமான தீர்வுப் பொதியை ஆக்குவதன் மூலமே யதார்த்தமான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும்.


ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி.

தமிழ்க் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் ஒரு தேசத்துரோகம். பிறந்த நாட்டுக்கு இழைக்கும் துரோகம். வேறு நாடுகளில் இவ்வாறான நடைமுறையில்லை. இந்தியாவில் எவரும் வெளிநாடுகளுக்குச் சென்று உள்நாட்டுப் பிரச்சினைகளை எடுத்துச் செல்ல முடியாது.

புலம் பெயர் சக்திகளுடன் இணைந்து போராட்டம் என்ற போர்வையில் நமது நாடே சிதைந்தது. மக்களின் நிம்மதி தொலைந்தது. தமிழ் இளைஞர்கள் அழிந்தனர்.

கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிந்தன. சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் உள்நாட்டிலேயே தீர்க்கப்பட வேண்டும். தமிழ் கூட்டமைப்பு கிழக்கு மாகாண கூட்டமைப்பு எம்.பிக்களைப் புறக்கணித்தே அமெரிக்கா சென்றுள்ளது. இது அந்த மக்களை புறக்கணிக்கும் செயலாகும்.

சம்பந்தன் - தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்

இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்க வேண்டிய கட்டாய நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை வழங்குமாறு சர்வதேசம் இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

இதை நாம் சாதகமாகப் பயன்படுத்தி தமிழ் மக்கள் தங்கள் வாழ்விடங்களில் சகல உரிமைகளுடன் வாழும் நிலையை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறோம்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி நாம் பேசுகின்ற போது, அங்கு வாழ்கின்ற முஸ்லிம் மக்க ளின் உரிமைகள் பற்றியும் நாம் அக்கறை கொண்டுள்ளோம். தமிழ் மக்களுக்கு நிகரான உரிமை பெற்றவர்களாக முஸ்லிம் மக்களும் வாழ வேண்டும் என்பதே எமது நோக்கம்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடம், எம் மண்ணில் நாம் வாழவும் அதனை ஆளவும் எமக்கு உரிமை உண்டு. எமது உரிமைகளைப் பெறுவதற்குச் சாதகமான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட பல சந்தர்ப்பங்களை நாம் தவற விட்டுள்ளோம். அதனால், நிதானமாகச் சிந்தித்து செயற்பட வேண்டிய தருணம் இது.

சிவனேசதுரை சந்திரகாந்தன்
கிழக்கு மாகாண முதலமைச்சர்

தமிழ்தேசிய கூட்டமைப்பு தமது கட்சிக்கு நிதி சேகரிப்பதற்காகவே வெளி நாட்டு பயணங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர், இந்த பயணத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை யென தெரிவித்தார்.

அமெரிக்கா, கனடா மற்றும் லண்டன் ஆகிய பகுதிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்றுள்ளனர். இவர்கள் அங்கு சென்றதன் நோக்கம் இதுவரை தெரியவில்லை. அங்கு சென்றதால் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கப் போகின்றது என்பது தொடர் பிலும் தெரியவில்லை.

அத்துடன் இந்த குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இணைத்துக்கொள் ளப்படவில்லை. இதனை நாங்கள் தெரி வித்தால் பிரதேசவாதம் பேசுவதாக கூறுகின்றனர்.

கிழக்கு மாகாண தலைவராக சம்பந்தரை கூறுகின்றனர். அவருக்கு கிழக்கு மாகாணம் தொடர்பில் எதுவித அக்கரையும் இல்லை.

ஈ சரவணபவன் எம்.பி.

தமிழ் மக்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்ற தந்தை செல்வாவின் கூற்றை அவரின் சிலையை உடைத்ததன் மூலம் நிரூபித்து விட்டிருக்கின்றனர்.

தமிழ்க் கூட்டமைப்பு அமெரிக்காவிற்குச் சென்று பேச்சு நடத்திவரும் சூழ்நிலையில் அதற்குப் பழிதீர்க்கும் வகையில்தான் செல்வா சிலை உடைக்கப்பட்டுள்ளது.

எமது எம்.பி.க்கள் தமிழரின் பிரச்சி னைகளை சர்வதேசத்திடம் எடுத்துரைத்து வரும் நிலையில், இந்தச் சிலை உடைப் பானது அதற்குப் பழிவாங்கும் செயற்பாடு தானா என்று கேள்வியெழுப்ப விரும்பு கின்றேன். இந்த விடயத்தை இலேசான விடயமாகத் தமிழர்கள் கருதவில்லை. சர்வதேச சமூகமும் இதனை அப்படிக் கருதக்கூடாது என்று நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

த. சித்தார்த்தன் - புளொட் இயக்கத் தலைவர்

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு கிடைப்பதை தடுப்பதற்காகவே பேரினவாதிகள் கூட்டமைப்பின் வெளிநாட்டு விஜயத்திற்கு இனவாதச் சாயம் பூசுகின்றனர். நாட்டுக்குள் பிரச்சினைகள் தீர்க்கப்படாத போது வெளிநாடுகளுக்கு சென்று முறைப்பாடு செய்துள்ளமை வரலாறாகுமென்றும்,

வெளிநாடு சென்றுள்ள கூட்டமைப்பினர் எந்தவொரு இடத்திலும் தனித் தமிbழ தொடர்பாக கருத்துக்களை வெளியிட வில்லை. அத்தோடு தமிழ் அரசியல் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றமை இது முதற்தடவையல்ல. கடந்த காலங்களிலும் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்காத போது பல தமிழ் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று முறைப்பாடுகளை செய்துள்ளனர். பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்காததன் காரணமாகவே தலைவர்கள், வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

தந்தை செல்வநாயகம், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் போன்றவர்கள் வெளிநாடு களுக்கு சென்று நியாயம் கோரியுள்ளனர். ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஆளுங்கட்சியிலுள்ள முக்கிய தலைவர்கள் முன்னர் தமக்கு பிரச்சினைகள் ஏற்பட்ட போதெல்லாம் வெளிநாடுகளுக்கு சென்று முறையிட்டுள்ளனர். இந்தப் பிரச்சினையை இங்குள்ளவர்கள் தீர்த்தால், எல்லாவற்றுக்கும் முடிவு கிட்டும்.

பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமது விருப்பத்திற்கு அமெரிக்கா செல்லவில்லை. அமெரிக்காவின் அழைப்பின் பேரிலேயே அவர்கள் சென்றிருக்கிறார்கள். தமிழ் மக்கள் சர்வதேசத்தை நீண்டகாலமாகவே நம்பியிருக்கிறார்கள். ஆனால் எந்த நன்மையும் கிடைத்ததாகத் தெரியவில்லை.

அமெரிக்கா ஏன் அழைத்ததோ தெரியவில்லை. அரசாங்கத்தின் பத்துச் சுற்றுப் பேச்சுக்களைக் கூட்டமைப்பினர் நடத்தியுள்ளனர். தீர்வு தொடர்பாக எந்த ஓர் இணக்கமும் ஏற்படவில்லை என்கிறார்கள். அதனால், சர்வதேசத்தை நாடும் சந்தர்ப்பங்கள் உண்டு. கூட்டமைப்பினர் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த முடியும். அரசியல் இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழ்க் கூட்டமைப்பு சர்வதேசத்தை நாடுவதால் பெரும்பயன் ஏற்படுமெனச் சொல்ல முடியாது. அரசாங்கம் இவ்வாறான ஒரு நிலைக்கு இடம் வைக்கக் கூடாது. பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கு உடன்பாடான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அமெரிக்கா சென்றதால் கூட்டமைப் பினரைக் கைது செய்யுமாறு எவரும் சொல்ல முடியாது. தற்போது பயங்கரவாதமோ, பிரிவினைவாதமோ கிடையாது. மாநில சுயாட்சி தான் தேவை. ஏற்கனவே அதனை அரசு ஏற் றுக்கொண்டிருக்கிறது. பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் பிராந்திய சபை குறித்து பேசப்பட்டது. ஜே.ஆர். காலத்தில் மாவட்ட சபை பிரஸ்தாபிக்கப்பட்டது.

அரசாங்கத் தரப்பில் பிராந்திய சுயாட்சிக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பல சந்தர்ப்பங்களில் ஆதரித்தே வந்திருக்கிறார்கள். மாகாண நிர்வாகத்தைப் பலப்படுத்த வேண்டும். நிர்வாகத்தை இலகுபடுத்தவே இந்த ஏற்பாடு. தனிநாடு பெற்றுக்கொடுப்பதற்கு அமெரிக்கா அழைக்கவில்லையே. ஆகவே, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வொன்றைக் காண வேண்டும்.

பிரபா கணேசன் எம்.பி.

முள்ளிவாய்க்கால் போரின்போது தமிழர்களுக்குப் பாரிய இழப்பு ஏற்பட்டபோது எந்தவொரு வெளிநாடும் கண்டுகொள்ளவில்லை. புலிகள் வெளிநாடுகளை நம்பியிருந்தபோதும் எதுவும் நடைபெறவில்லை. இதனைப் புரிந்துகொண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும். எவ்வாறெனினும் வெளிநாடுகளில் எமது நாட்டைக் காட்டிக்கொடுக்க முடியாது. இதனால் வீண் முரண்பாடுகள்தான் உருவாகும். ஆகவே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியே தீர்வு காண வேண்டும்.

புலிகள் இருக்கின்ற போது ஆனந்த சங்கரியும் ரவிராஜும் விமர்சித்தார்கள். ஆனால், இறுதியில் ரவிராஜ் பின்வாங்கிவிட்டார். சங்கரி இறுதிவரை ஒரே நிலைப்பாட்டில் இருந்தார். அவர் சொன்னதுதான் நடந்தது. இன்று புலிகள் இல்லாத நிலையில் கூட்டமைப்பினர் செயற்படுகிறார்கள். எனினும் அவர்கள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர். இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்திய வம்சாவளியினரும் உள்வாங்கப்பட வேண்டும்.

(சுஐப் எம்.காசிம், விசு கருணாநிதி, எஸ்.சுரேஷ்)
-------------------------------------------------------------------

No comments:

Post a Comment