Sunday, November 6, 2011

தமிழ்க் கூட்டமைப்பு சர்வதேசத்துடன் இணைந்து எடுத்துவரும் காட்டமான நடவடிக்கைகள் உள்ளூரில் ஒற்றுமையாக, சகோதரர்களாக வாழ்ந்துவரும் சிங்கள மக்களையும் தமிழ் பேசும் சமூகங்களையும் பிரித்துவிடக் கூடாது!

Sunday, November 06, 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அமெரிக்காவிற் குச் சென்ற தூதுக் குழுவினர் அங்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தைச் சேர்ந்த பல உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்துரையாடியுள்ளனர். அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் ரொபட் பிளேக்கின் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அங்கு இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்துப் பேச்சு நடத்த சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் தொடர்ந்து மூன்று தினங்களாக இவர்களுடன் பல உயர்மட்ட இராஜதந்திரிகள் பலரும் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். பல கோடி தமிழர்கள் வாழும் எமது அண்டை நாடான இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்குக்கூட அழைத்து முக்கியத்துவம் கொடுத்துப் பேச்சு நடத்தாத நிலையில் அமெரிக்காவில் தமிழ்க் கூட்டமைப்பிற்கு இவ்வளவு பெரிய சந்தர்ப்பம் கிடைத்தது குறித்துப் பலரும் முதலில் அதிர்ச் சியே அடைந்தனர்.

ஆரம்பத்தில் தமிழ்க் கூட்டமைப்பினரை அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் பேச்சு நடத்த அழைத்திருக்கிறது என்ற செய்தி பரவியதும் இது தமிழ்க் கூட்டமைப்பின் வழமையான வாய்ச் சவடால் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் இன்று அது நிஜமாகியுள்ளதால் சற்று குழப்ப மடைந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்கா சென்று தாம் நடத்திய பேச்சுக்கள் தமக்குப் பூரண திருப்தியைத் தந்துள்ளதாக கூட்டமைப்பின் உறுப்பினராக பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் சர்வதேச சமூகம் தமிழர் தீர்வு விடயத்தில் ஆதரவை நல்கும் நிலைப்பாட்டில் உள்ளதாக கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கிறார். இவை தமிழர் தீர்வு தொடர்பான சர்வதேசத்தின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது.

தமிழ்க் கூட்டமைப்பினரை அமெரிக்கா இவ்வாறு திடீரென்று அழைத்துப் பேச்சு நடத்தக் காரணம் என்ன எனும் சந்தேகம் இன்னமும் பலரது மனங்களில் உள்ளது. அதேபோன்று தமது பேச்சில் பூரண திருப்தி எனக் கூறிய கூட்டமைப்பினர் தாம் என்ன பேசினோம் என்பது பற்றி வாயும் திறக்கவில்லை. தமிழர் பிரச்சினை பற்றியே நிச்சயம் பேசியிருப்பார்கள் என்பது தமிழ் மக்களது நம்பிக்கையாக உள்ளது. சிலருக்கு அமெரிக்காவுக்குத் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு விஸா, மற்றும் தங்குமிட வசதி, தமது பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு மேற்படிப்பு என முன்னர் போல பேசியிருப்பார்களோ எனும் சந்தேகமும் இருக்கத்தான் செய்கிறது.

எனினும் இன்று இலங்கைத் தமிழர் விவகாரம் அமெரிக்கா வரை சென்றுவிட்டது. இந்திய தலைநகர் புதுடில்லிவரை முறையாகச் செல்லவில்லையே என ஏங்கிய தமிழருக்கு இன்று ஒரு வகை நிம்மதி ஏற்பட்டுள்ளது இயல்பே. ஆனாலும் தமிழ்த் தலைமைகள் எங்கு சென்றாலும் நாம் இலங்கையில் ஆட்சி நடத்தும் அரசாங்கத்துடனும் சகோதர இனமான சிங்கள மக்களுடனுமே வாழப் போகின்றோம் என்பதை மறந்துவிடக் கூடாது. அதற்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் தமிழ்த் தலைமைகள் நடந்து விடக்கூடாது.

இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர்கள் வடக்கு கிழக்கில் மட்டுமே வாழவில்லை. தலைநகர் கொழும்பில் மலையகத்தில் என்று பரந்துபட்டு வாழ்ந்து வருகிறார்கள். தமிழர்களுடன் தமிழ் பேசும் மற்றுமொரு இனமாக முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களுடன் சகோதரர்களாக நாட் டின் சகல பகுதிகளிலும் பரந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.

தமிழ்க் கூட்டமைப்பு சர்வதேசத்துடன் இணைந்து எடுத்துவரும் காட்டமான நடவடிக்கைகள் உள்ளூரில் ஒற்றுமையாக, சகோதரர்களாக வாழ்ந்துவரும் சிங்கள மக்களையும் தமிழ் பேசும் சமூ கங்களையும் பிரித்துவிடக் கூடாது. வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்குப் பிரச்சினை இருப்பது உண்மை.

அதற்குத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம். அதற்கு மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

அதனை இலங்கை அரசாங்கத்துடன் பேசி தீர்த்துக்கொள்வதே சிறப்பாக அமையும். ஆனால் இலங்கை அரசுடன் பேச்சு நடத்துவதில் நம்பிக்கையில்லை. அரசாங்கம் தம்மை ஏமாற்ற முனை கிறது. தமிழ்ப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன என்றெல்லாம் குற்றம் சாட்டியே தமிழ்த் தரப்பு சர்வதேசத்தின் உதவியை நாடி வருகிறது. ஆனால் சர்வதேசத்தின் உதவி நிச்சயம் ஒரு எல்லைக்கு உட்பட்டதாகவே இருக்கும். குடும்பத்து சகோதரர் சண்டைக்கு பக்கத்துத் தெருவிலு ள்ள தெரியாத மூன்றாவது நபரிடம் சென்று முறையிடும் செயலாகவே இதனைக் கொள்ள வேண் டும்.

கூட்டமைப்பினர் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் அமெரிக்காவில் தங்கியிருந்தார். அவர் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கி மூனைச் சந்தித்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர் என்று தெரிவித்திருக்கிறார். அதனால் அமெரிக்கா தமிழ்த் தரப்புடன் பேசுவதனால் ஏனைய தமிழ் மக்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடனும் பேசவேண்டும் என்பதே மஹிந்த சமரசிங்கவின் வேண்டு கோளாக இருந்தது.

அமைச்சரின் கருத்தினை ஐ. நா. செயலாளர் எவ்வளவு தூரம் உள்வாங்கினாரோ தெரிய வில்லை ஆனால் அதில் உண்மை இல்லாமல் இல்லை என்பது மட்டும் உண்மை. அதேவேளை பெரும்பான்மையான தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்க் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குவதால் அவர்களுடன் பேச்சை நடத்தி பின்னர் அவர்கள் மூலமாக ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கு விடயத்தைத் தெளிவுபடுத்தலாம் என்பது அமெரிக்காவின் எண்ணமாக இரு க்கலாம். ஆனால் எமது தமிழ்க் கட்சிகளுக்கிடையேயான ஒற்றுமை பற்றி அவர்கள் அறியாதிரு க்க வாய்ப்பில்லை. எனவே பொறுத்திருந்து பார்ப்பதுதான் தற்போதைய புத்திசாலித்தனம்.

அமெரிக்காவில் ஐ. நா. செயலாளரை தமிழ்க் கூட்டமைப்பினரால் சந்திக்க முடியவில்லை. இரா ஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனையும் சந்திக்கவில்லை. இது அவர்களுக்கு ஏமாற்றத் தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் அதனைத் தோல்வியாகக் கருதிவிட முடியாது. தமிழர் பிரச்சினை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வரை சென்றதே பெரிய விடயம்.

அத்துடன் அமெரிக்கா இலங்கை அரசாங்கம் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் மதிப்பளிக்கும் தன்மை குறித்தும் கவனத்திற்கொள்ள வேண்டும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக அரசாங்கத்திற்குரிய கெளரவத்தை வழங்கியதனாலேயே அமெரிக்கா எமது அரசின் வேண்டு கோளுக்கு இணங்கிச் செயற்பட்டது.

முடிவாக தமிழ்க் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் வெற்றி தோல்வியில்லாத ஒரு பயணமாக முடிவடைந்துள்ளது என்றே கூறவேண்டும்.

editor.
-------

No comments:

Post a Comment