Thursday, November 3, 2011

இலங்கையின் பிரிவினைவாதத்தையே இலக்காகக் கொண்டு செயல்படும் சில தமிழ் அரசியல்வாதிகள்-விமல் வீரவன்ச!

Thursday, November 03, 2011
இலங்கையின் பிரிவினைவாதத்தையே இலக்காகக் கொண்டு செயல்படும் சில தமிழ் அரசியல்வாதிகள் ஒஸ்லோவுக்கும் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் சென்று இலங்கை அரசுக்கு எதிராக பிரயத்தனம் மேற்கொள்ளும் படி அந்த நாடுகளில் உள்ள அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றார்கள் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள தயட்ட கிருல்ல கண்காட்சியை முன்னிட்டு பதவிய நகரில் ஜனசென வீடமைப்பு கிராமமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி இலங்கையில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும்போது பிரபாகரனை காப்பாற்றுவதற்காகவும் யுத்தத்தை இடைநடுவில் நிறுத்துவதற்கும் மேற்படி நாடுகள் இலங்கை அரசுக்கும் ஜனாதிபதிக்கும் பல பிரயத்தனங்களை மேற்கொண்டன. எதற்கும் அடி பணியாத ஜனாதிபதி ஒரே அடியில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். தற்பொழுதும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இலங்கையைப் பிரித்து ஆள்வதற்கு எத்தனிக்கும் எவ்வித முயற்சிகளையும் ஜனாதிபதியும் அரசும் முறியடிப்பதற்கு ஒரு போதும் தயங்கப் போதில்லை.

அன்று யுத்தத்திற்காக தமிழ் பிரிவினைவாதிகள் தமிழ் யுவதிகளை தற்கொலைப்படையாக அனுப்பி நாடு முழுவதும் மனிதப் படுகொலைகளை மேற்கொண்டனர். ஆனால் தற்பொழுது வெளிநாட்டில் வாழும் தமிழ் பிரிவினைவாதிகள், அங்கு சொகுசாக வாழ்ந்து கொண்டு இலங்கையின் பிரிவினைக்கு எதிராக கோஷம் எழுப்புகின்றனர். அவர்கள் வாழும் நாடுகளில் தொடர்ந்தும் அவர்கள் வாழ்வதென்றால் இலங்கையில் ஏன் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்? இது அவர்களது குறிக்கோளாகும். இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் ஜனாதிபதி முறியடிப்பார்.

யுத்த காலத்தில் அநுராதபுரம் போன்ற எல்லைக் கிராம மக்கள் பெரிதும் துன்பங்களையும் துயரங்களையும் எதிர்நோக்கினர். தமது உறவினர்களையும் இழந்தனர். எல்லைக் கிராமப் பகுதிகளில் வாழும் பெரும்பாலான சிங்கள இளைஞர்கள் இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காகத் தம்மை அர்ப்பணித்தனர். ஆகவே தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் பயங்கரவாதத்துக்கு முகம் கொடுத்த எல்லைக் கிராம மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தினை நாம் ஏற்படுத்துகிறோம். இவ்வீடமைப்புத் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்படுகின்றது" என்றார்.

No comments:

Post a Comment