Wednesday, November 23, 2011சென்னை : சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் மீது அதிமுகவினர் செருப்பு, தண்ணீர் பாட்டில் வீசி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி 200 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டு தேர்தல் நடந்தது. இதில் 168 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது. 2 சுயேச்சைகளும் அதிமுகவில் இணைந்தனர். இதனால் அதிமுகவின் பலம் 170 ஆனது. திமுக 24, காங்கிரஸ் 2, பாமக, தேமுதிக, மதிமுக தலா ஒரு இடங்களை கைப்பற்றின. இந்நிலையில் கடந்த சனி, ஞாயிற்றுகிழமைகளில் மண்டல குழு தலைவர், நிலைக்குழு தலைவர், நிலைக்குழு உறுப்பினர், நியமன குழு உறுப்பினர் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 14 மண்டல குழு தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது. அம்பத்தூர் மண்டலத்தை திமுக கைப்பற்றியது. இது தவிர அனைத்து மாநகராட்சி பதவிகளையும் அதிமுகவே கைப்பற்றியது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் முதல் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு ரிப்பன் மாளிகையில் தொடங்கியது. மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்தார். துணை மேயர் பெஞ்சமின், ஆணையாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் திமுக எதிர்க்கட்சி தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் எழுந்து பேச முற்பட்டார். அவரை பேச விடாமல் அதிமுக உறுப்பினர்கள் தடுத்து கடும் ரகளையில் ஈடுபட்டனர். இதற்கு திமுக கவுன்சிலர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். அப¢போது திடீரென சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் திமுக கவுன்சிலர்கள் மீது தண்ணீர் பாட்டில் மற்றும் செருப்புகளை தூக்கி வீசி அதிமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு அதிமுக கவுன்சிலர் சுபாஷ்சந்திரபோசின் கழுத்தை நெரிக்க முற்படுவதுபோல் பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் 159வது வார்டு திமுக கவுன்சிலர் ஜெயந்திக்கு சிலர் முதுகில் குத்துவிட்டதால் அவர் நிலைதடுமாறினார். இதனால் மன்றத்தில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த சுபாஷ் சந்திரபோஸ் கூறியது: பால், பஸ் கட்டண உயர்வு குறித்து கூட்டத்தில் பேச இருந்தோம். மேலும், அண்ணா நூலக இட மாற்றம், புதிய தலைமை செயலக இடமாற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும், கடந்த மாதம் சென்னையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படாதது குறித்தும் பேச இருந்தோம். ஆனால் எங்களை பேச விடாமல் தண்ணீர் பாட்டில், செருப்புகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம். திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோளுக்கு இணங்க, மன்ற கூட்டத்தில் அமைதி காப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment