Wednesday, November 23, 2011

புலிகளின் மாவீரர் தின ஊர்வலம் என நினைத்து பாடசாலை மாணவர்களது விழிப்புணர்வு ஊர்வல நிகழ்வை படையினர் தடுத்து நிறுத்திய சம்பவமொன்று நடந்துள்ளது!

Wednesday, November 23, 2011
புலிகளின் மாவீரர் தின ஊர்வலம் என நினைத்து பாடசாலை மாணவர்களது விழிப்புணர்வு ஊர்வல நிகழ்வை படையினர் தடுத்து நிறுத்திய சம்பவமொன்று வன்னியினில் நடந்துள்ளது. புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த தினமான 26, மற்றும் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை நினைவில் வைத்துள்ள படையினருக்கு வடக்கு கிழக்கினில் எப்பகுதியிலாவது ஊர்வலங்களோ, பொதுக்கூட்டங்களோ நடத்துவதாயின் முன்னனுமதி பெறவேண்டுமென அறிவித்துள்ளனர்.

வன்னி மாவட்டத்தில் கனகராயன் குளம்;. வித்தியாலயத்தில் வவுனியா வடக்கு வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் கனகராயன்குளம் மகா வித்தியாலய மாணவர்களால் உலக கைகழுவுதல் தின விழிப்புணர்வு ஊர்வல நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்விற்கு யுனிசெவ் அமைப்பு நிதி அனுசரணை வழங்கியிருந்தது.

இந்த ஊர்வலம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30க்கு கனகராயன்குளம் பொதுச் சந்தையில் ஆரம்பமாகிய நிலையில் அங்கு வந்த இராணுவத்தினர் ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தியதுடன் இதற்கான அனுமதி பெறப்படவில்லை எனவும் என்ன நிகழ்வாயினும் எம்மிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அத்துடன் அங்கு கூடி இருந்த வவுனியா வடக்கு பிரதிக் கல்விப்பணிப்பாளர் மற்றும் யுனிசெவ் நிறுவன வதிவிட பிரதிநிதியையும் விசாரணைக்கென முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினம் பின்னர் உண்மையை தெரிந்து கொண்டு அவர்களை விடுவித்துள்ளனர்.

மாவீரர் வார நிகழ்வுகள் வடகிழக்கு மாவட்டங்களில் நடைபெற்றுவிடும் என்பதற்காக அதிகளவான இராணுவப் புலனாய்வாளர்களின் பிரசன்னம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது......

இலங்கையின் வடபுலத்தினில் புலிகளின் மாவீரர் தினக்கொண்டாட்ட ஏற்பாடுகளைத் தடுப்பதில் பாதுகாப்புத் தரப்பு முழு அளவினில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக வன்னியிலும் குடாநாட்டிலும் பெருமளவினில் பொலிஸார் வீதி பாதுகாப்பு நடவடிக்கைகளில் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். குறிப்பாக பிரதான வீதிகளெங்கும் பெருமளவினில் பொலிஸார் வாகன சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரவு வேளை தாண்டியும் இச்சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றன. அதே போன்றே பொலிஸாருக்கு மேலதிகமாக படையினரும் பிரதான காவலரண்கள் தோறும் கடமையினில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.வழமையாக ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தின் 21 ம் திகதி முதல் 27ம் திகதி வரையான தினங்களை புலிகள் மாவீரர் தினங்களாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment