Wednesday, November 16, 2011

கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்கக் கோரி தனித்தனியாக மனுத் தாக்கல்!

Wednesday, November 16, 2011
கடத்தப்பட்டு திருகோணமலைக் கடற்படத் தளத்தில் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் மூன்று மாணவர்களையும் விடுவிக்கக் கோரி மேன்முறையீட்டு நீதி மன்றித் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் கற்பதற்காக நாட்டை விட்டுச் செல்லவிருந்த மாணவரும் ஏனைய க.பொ.த. உயர்தர மாணவர்கள் இருவரும் கடத்தப்பட்டு கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அம்மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம் மாணவர்களை நீதிமன்றில் ஆஜராக்குமாறு கோரி அவர்களின் பெற்றோர்கள் தனித்தனியாக 3 ஆட்கொணர்வு மனுக்களை மேன் முறையீட்டு நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளனர்.

திருமதி சரோஜா நாகநாதன் தனது மகன் ரஜீவ் நாகநாதனையும் ஜி.விஸ்வநாதன் தனது மகன் பிரதீப்பையும் திருமதி கா.வே. ராமலிங்கம் தனது மகன் திலகேஸ்வரனையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கோரி இம்மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் கொட்டாஞ்சேனையை சேர்ந்தவர்களாவர். இம்மாணவர்கள் திருமலை கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தாம் நம்புவதாகவும் அவர்களின் பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிரேஸ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜாவுக்கூடாக தாக்கல் செய்யப்பட்ட இம் மனுக்களில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டி.ட பிள்யூ.ஐ.ஏ.எஸ்.திசாநாயக்க, பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன், சட்டமா அதிபர் ஈவா வனசுந்தர ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப் பிடப்பட்டுள்ளனர்.

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் ரஜீவ் நாகநாதன் அனுமதி பெற்றதையடுத்து அவன் தந்தை 2008 செப்டம்பர் 17 ஆம் திகதி தனது இல்லத்தில் விருந்தொன்றை ஏற்பாடு செய்ததாகவும் ரஜீவின் நண்பர்களான திலகேஸ்வரன், பிரதீப், டிலான் மொஹமட் ஆகியயோர் இதில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின் வெளியே சென்ற மேற்குறிப்பிட்ட ரஜீவ், திலகேஸ்வரன், பிரதீப் மூவரும் மறுநாள் 18 ஆம் திகதி வரை வீடு திரும்பவில்லை எனவும் இதனால் அவர்களின் பெற்றோர்கள் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

2009 ஜனவரி மாதம் ரஜீவின் தந்தையை தொலைபேசியில் அழைத்த நபர் தன்னை சந்திம என அடையாளப்படுத்திக் கொண்டு ரஜீவும் அவன் நண்பர்களும் மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை விடுவிப்பதற்கு 25 இலட்சம் ரூபா வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

2009 பெப்ரவயில் நந்தகுமார் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர் தொலைபேசியில் அழைத்து இம்மாணவர்கள் மட் டக்களப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இம் மாணவர்கள் ஆரம்பத்தில் கொழும்பு சைத்திய வீதியிலுள்ளது என நம்பப்படும் வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு மாற்றப்பட்டதாகவும் மனு தாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்மாணவர்கள் கைது செய்யப்பட்டமைக்கும் தடுத்து வைக்கப்பட்டமைக்கும் காரணம் கூறப்படவில்லை எனவும் அவர்கள் கடற்படைச் சட்டத்தின் கீழ் கையாளப்படவோ கடற்படையினரால் தடுத்து வைக்கப்படவோ வேண்டியவர்கள் அல்லர் எனவும் மனுதாரர்கள் கூறி யுள்ளனர்.

No comments:

Post a Comment