Wednesday, November 16, 2011நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2012 மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடருக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்கு எதிர்பார்க்கின்றோம் என்று மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அடுத்தவருடம் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பையின் மனித உமை பேரவையின் 19 வது கூட்டத்தொடருக்கு இலங்கை எவ்வாறு முகம் கொடுக்கும் என்பது குறித்தும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளிவரவுள்ளமை தொடர்பிலும் விளக்கமளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க இவ்விடயம் குறித்து மேலும் கூறுகையில்,
கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவானது சுயாதீனமாக செயற்பட்டு பல்வேறு தரப்பினரிடம் சாட்சியங்களை பெற்றது. நாட்டின் பல பாகங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு சாட்சியங்கள் பெறப்பட்டன.
இந்நிலையில் நல்லிணக்க ஆணைக்குழு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ள பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையில் உள்ள சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது.
இதேவேளை, அடுத்தவருடம் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது. இதில் இலங்கையும் கலந்துகொள்ளும்.
அடுத்தவருடம் மார்ச் மாதம் அளவில் நாங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அதிகளவான பரிந்துரைகளை நாட்டில் அமுல்படுத்தியிருப்போம். அதன்படி நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுத்துக் கூறுவோம்.
அந்த வகையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை அமுல்படுத்துவதன் மூலம் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடருக்கு இலங்கை சிறந்த முறையில் தயாராகும் என்பதனை தெரிவிக்கின்றோம் என்றார்.
சுமார் ஒன்றரை வருட செயற்பாட்டின் பின்னர் நல்லிணக்க ஆணைக்குழு தமது இறுதி அறிக்கையை எதிர்வரும் 20 ம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment