Saturday, November 05, 2011மலேசியா உட்பட பல இடங்களில் திருடப்பட்ட வங்கிக்கடன் அட்டைகளைப் பயன்படுத்தி பல வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கி மோசடி செய்து வந்த பிரான்ஸ் மற்றும் மாலைதீவைச் சேர்ந்த இருவர் உட்பட ஐவரை நீர்கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவர்களில் கட்டுநாயக்க விமான நிலைய முன்னாள் பாதுகாப்பு ஊழியர், கட்டுநாயக்க விமான நிலைய தபால் ஊழியர் மற்றும் கண்டியைச் சேர்ந்தவர்களே ஏனைய மூவர்களாவர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவர்களைக் கைது செய்தபோது பதினாறு வங்கிக் கடனட்டைகள், எல்.சீ.டீ தொலைக்காட்சிப் பெட்டி, இரு தமிழர்களின் தேசிய அடையாள அட்டைகள் எட்டு கடவுச்சீட்டுகள் உட்பட பல இலட்சம் பெறுமதியான பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
வத்தளை, ஜாஎல, நீர்கொழும்பு பிரதேசங்களில் உள்ள நவீன சந்தைகள் விற்பனை நிலையங்களில் இந்தக் கடனட்டைகளை பயன்படுத்தி பெருமளவுக்கு பொருட்களை இவர்கள் கொள்வனவு செய்துள்ளனர்.
பிரான்ஸ் பிரஜையான சந்தேக நபர் சிங்கப்பூரிலும் இவ்வாறான மோசடிக்குற்றச் சாட்டில் சிறையில் இருந்து விட்டு விடுதலையானவர் என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மாலைதீவு பிரஜையான சந்தேக நபர் மாலைதீவுப் புடவைக் கடையின் உரியமையாளர் எனவும் இங்கிருந்து புடவைகளை வாங்கி மாலைதீவுக்கு அடிக்கடி அனுப்பி வந்தார் எனவும் தற்போது தெரியவந்துள்ளது.
அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையுடன் நட்புக் கொண்டிருந்து அவரின் உதவியுடன் இங்கு வந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் ஐவரையும் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதவான் ஏ.என்.எம்.சீ.அமரசிங்க, எதிர்வரும் 11 ஆம் திகதி வரையும் இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment