Saturday, November 5, 2011

50 ஆயிரம் வீடுகளுக்கு பதிலாக இனிமேல் பணக் கொடுப்பனவு!

Saturday, November 05, 2011
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதாக இந்திய அரசு உறுதியளித்திருந்த நிலையில் இப்போது அத்திட்டத்திற்கு நேரடியாக நிதியுதவியை வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

தமிழர் பகுதிகளான மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தில் வீடுகளைக் கட்டிக்கொடுக்க இந்தியா திட்டமிட்டிருந்தது.

கடந்த ஆண்டில் யாழ்ப்பாணம் பகுதியில் 1,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஓராண்டில் அங்கு 52 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் பயனாளிகளுக்கு நேரடியாக பணத்தை வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி இலங்கை ரூபாய் மதிப்பில் ஒவ்வொருவருக்கும் தலா 5.5 இலட்சம் ரூபா (இந்திய ரூபா மதிப்பில் 2.45 இலட்சம்) வழங்கப்படும் என்று தெரிகிறது.
இந்தத் திட்டம் ஏற்கனவே

தயாரிக்கப்பட்டு விட்டது. அதன் ஒப்புதலுக்காக மட்டுமே காத்திருக்கிறோம் என்று இந்திய வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். பணத்தை நேரடியாக வழங்குமாறு இந்திய அரசிடம் இலங்கை அரசு கேட்டுக் கொண்டதால் இத் திட்டத்தை செயற்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த அக்டோபரில் இலங்கை சென்ற இந்திய மத்திய வெளியுறவு செயலர் ரஞ்சன் மத்தாய் இந்திய அரசு சார்பில் தமிழர் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்திருந்தார்.

No comments:

Post a Comment