Tuesday, November 8, 2011

பார்க் கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அல்பன்சோ கொல்லப்பட்டார்!

Tuesday, November 08, 2011
கொலம்பியாவின் பார்க் கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அல்பன்சோ கானோ கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கானோ கொல்லப்பட்டதாக, ஜனாதிபதி ஜூவான் மானுவெல் சன்டோஸ் தெரிவித்துள்ளார்.

தசாப்த காலமாக நீடித்து வரும் ஆயுத போராட்டத்தில் பார்க் இடதுசாரி குழு அடைந்த மிகப் பெரிய தோல்வியாக கனோவின் மரணம் கருதப்படுகின்றது.

கொலம்பியாவின் தென் மேற்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது கானோ கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜுவான் கார்லோஸ் பின்சோன் தெரிவித்துள்ளார்.

பார்க் அமைப்பின் பல முக்கிய கமாண்டோக்களை கொலம்பிய இராணுவத்தினர் அண்மைக்காலமாக கொலை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

63 வயதான கானோவின், இருப்பிடத்தை தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்டதன் மூலம் அறிந்து கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கனோவின் தலைக்கு நான்கு மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. எஞ்சியுள்ள போராளிகளின் ஆயுதங்களை களைந்து சரணடையுமாறு ஜனாதிபதி ஜூனோ கோரிக்கை விடுத்துள்ளார்.

மனிதர்களைக் கடத்துவதையோ ஆயதப் போராட்டத்தையோ நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். நான் ஒரு கெரில்லாவாக இருப்பேனாகில், எனக்கு ஒரு பெண்ணைக் கடத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை, படையினரல்லாத ஒரு மனிதனைக் கடத்தி வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. யுத்தத்திற்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத சாதாரணக் குடிமக்கள் அனைவரையும் விடுதலை செய்யுங்கள். நான் இதனை ஒப்புக் கொள்ள மாட்டேன். இலத்தீனமெரிக்காவில் என்ன நடந்தது, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதனைப் பார்த்து அதற்குக்தக நடவுங்கள். யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. இதுவரை நடந்த மரணங்கள் போதும். கெரில்லா யுத்தம் என்பது பழைய வரலாறு. இன்றைய இலத்தீனமெரிக்காவில் ஆயுதப் போராட்டத்திற்கு இடமில்லை

வெனிசுலா ஜனாதிபதி
யூகோ சேவாஸ்
செப்டம்பர் 2008

சே குவேரா சுட்டுக் கொல்லப்பட்டார். ஸ்டாலின் சிலைகள் பெயர்க்கப்பட்டன. லெனினது சிலைகள் அடர்ந்த ரஸ்யக் கானகங்களுக்குள் எடுத்துச் செல்லப்பட்டுக் கைவிடப்பட்டது. சதாம் குசைனின் உயிரற்ற உடல் காட்சிப்படுத்தப்பட்டது. ஸியாவெஸ்கு கிளர்ச்சிக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார். அபிமல் குஸ்மான் கைது செய்யப்பட்டார். அப்துல்லா ஒச்சலான் கைது செய்யப்;பட்டார். பிரபாகரன் கொல்லப்பட்டார். ஓசாமா பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்டார். கடாபி சுட்டுக் கொல்லப்பட்டார். நவம்பர் 4 ஆம் திகதி கொலம்பிய கெரில்லா இயக்கமான பார்க்கின் தலைவரும் தத்துவாசிரியருமான அல்பான்ஸோ கெனோ சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். சமகாலத்தில் உலகக் கார்ப்பரேட் மூலதனக் கலாச்சாரத்திற்கு எதிராக, முதலாளித்துவ வங்கிமுறைமைக்கு எதிராக, அமெரிக்காவையும் உலகையும் கைப்பற்றுங்கள் என, வன்முறையை மறுத்த வெகுமக்கள் திரள் இயக்கம் தோன்றியிருக்கிறது.

மார்க்சீய-லெனினியம் முன்வைத்த தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான கம்யூனிஸ்ட் கட்சியின் பின் திரளுவது என்பதற்கு மாற்றாக, அடிநிலை மக்கள் மட்டத்திலான ஜனநாயக இயக்கங்களைத் ஸ்தாபிப்பது எனும் கிளர்ச்சி முறை உலகெங்கிலும் எழுந்திருக்கிறது. உலகம் வேறொரு பாதைக்குள் நுழைந்திருக்கிறது. வன்முறை மூலமான, ஒரு கட்சியினால் தலைமை தாங்கப்பட்ட அல்லது ஒரேயொரு இயக்கத்தினால் தலைமை தாங்கப்பட்ட, மத்தியத்துவப்படுத்தப்பட்ட கிளர்ச்சி அரசியலின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. இதனது பொருள் அனைத்துக் கிளர்ச்சி அரசியலையும், மக்கள்திரள் அரசியலையும், எதிர்ப்பு அரசியலையும் கைவிட்டுவிட்டு, கொடுத்ததை வாங்கிக் கொள்வோம் என அரசிடம் மண்டியிடும் சமரச அரசியல்தான் இனி சாத்தியம் என்பது இல்லை. வன்முறை அரசியல் இனி சாத்தியமில்லை, மக்கள் திரள் அரசியலே இனி சாத்தியம் என்பதுதான் இதனது செய்தி. ஆயுதப் போராட்ட அரசியலின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது, இடையறாத மக்கள் கிளர்ச்சி அரசியல்தான் சாத்தியம் என்பதுதான் இதனது செய்தி.

ரஸ்யப் புரட்சி மரபையும், லெனினியத்தையும், கியூப தேசிய விடுதலைப் போராட்ட மரபையும், சே குவேராவின் சர்வதேசியத்தையும் ஒருவர் மறக்கவும் மறுக்கவும்தான் வேண்டுமா? அவ்வாறு மறுப்பவனும் மறப்பவனும் வரலாற்றை மறுப்பவன் மட்டுமல்ல வரலாற்றின் செய்திகளை அறியாதவனும் ஆவான். இன்று நாம் பெற்றிருக்கிற தொழிலாளர் உரிமைகள், சிவில் உரிமைகள், அரச நலத்திட்டத்திற்கான வேர்கள், ஆண்கள், பெண்கள், விளிம்பு நிலை மக்கள், ஒடுக்கப்பட்ட நாட்டினர், குழந்தைகள், பழங்குடியினர் என நாம் பெற்றிருக்கும் பல்வேறு உரிமைகளின் ஊற்று அக்டோபர் புரட்சியில்தான் இருக்கிறது. காலனியாதிக்க எதிர்ப்பு விடுதலையின் பெறுபேறுகளை எமக்குச் சாத்தியமாக்கியவைகள் லெனினியமும் குவேராயிசமும்தான். அரசு என்பது வெகுமக்களுக்குப் பொறுப்புடையது என்பதன் அடிப்படைகளை இவர்களே எமக்குத் தந்தார்கள். மாணவர்கள்-தொழிலாளர்கள்-பெண்கள்-ஒடுக்கப்பட்ட உலக மக்கள் என வெகுமக்கள் திரள் அரசியலை எமக்குக் கொடுத்த மரபு இதுதான். ஐhநூறு ஆண்டு காலனியத்திற்கு எதிரான விடுதலை மரபு இவர்களது கொடை. விடுதலையின் பாதையில், வரலாற்றின் சோதனைக் கூடத்தில் இவர்கள் செய்வித்த வினைகளின் பெறுபேறுகளே இன்று நாம் பெற்றிருக்கும் இந்த விடுதலைப் பிரக்ஞை. வரலாற்றை மாற்றிய இவர்கள் சில சமயம் வரலாற்றுக்கு எதிராகவும் இயங்க நேர்ந்தது. அதற்கான விலையை அவர்களும் அவர்களது மரபாளர்களும் கொடுத்திருக்கிறார்கள். சில வேளைகளில் எதிரிகள் எம் மீது அதனைச் சுமத்தினார்கள்.

குவேரா முதல் அல்பான்ஸோ கெனோ வரை கொல்லப்பட்டவர்கள் அனைவரும் வேறு வேறு வகைகளில் ஒடுக்குமுறை அமைப்பு, அதிலிருந்து தாம் நேசித்த மக்களின் மீட்சி எனச் செயல்பட்டவர்கள்தான். கொள்ளையர்கள், பயங்கரவாதிகள், மூன்றாம் வர்க்கத்தினர் என இவர்களில் சிலர் அழைக்கப்பட்டார்கள். இவர்களில் சிலரது நடவடிக்கைகள் அவ்வாறு அமைந்தும் இருந்தன. இவர்கள் குறித்த விமர்சனங்களில் இருந்து அவற்றை நாம் பயில்கிறோம். கருத்தியல், அரசியல் என அனைத்து மட்டத்திலும் சமகாலத்துக்கு உகந்த, அனுபத்தினால் விளைந்த, நிகழ்காலத்திற்கான தந்திரோபாயங்களும் நடவடிக்கைகளும் சோதனை முயற்சிகளும்தான் இன்று நமக்குத் தேவைப்படுகின்றன. சோல்செனித்சன் சொன்ன மாதிரி வரலாற்றில் இதுவரைக்கும் சிந்தப்பட்ட இரத்தத்துக்குக் காரணமானது கம்யூனிஸம் என எம்மால் சொல்ல முடியாது. இதுவரைக்குமான வன்முறைக்கும் இரத்தச் சிந்துதலுக்கும் மூலதனமும் காலனியமும்தான் காரணம் என்பதை எம்மால் உறுதியானச் சொல்ல முடியும். இன்று அது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

இப்போது கொல்லப்பட்டிருக்கிற அல்பான்ஸோ கெனோ கியூபப் புரட்சியினது மரபாளன்தான். சே குவேராவின் மரபாளன்தான். சே குவேராவின் நாட்களில் இலத்தினமெரிக்கக் கண்டத்தில் நிலவிய சமூகப் பொருளாதார ராணுவ மற்றும் அமெரி;க்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நிலைமைகள்தான் அல்பான்ஸோ கெனோவையும் உருவாக்கியது. கியூபப் புரட்சியாலும், பிடல் மற்றும் குவேராவினாலும் ஆதர்ஷம் பெற்ற அவர் இன்றைய வெனிசுலா அதிபரான செவாசினால் முன்னெடுக்கப்படும், இலத்தீனமெரிக்கக் கண்ட மக்களின் ஒற்றுமை, 21 ஆம் நூற்றாண்டு சோசலிசம், இலத்தீனமெரிக்க் கண்டத்தில் அமெரி;க்க ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு, ராணுவத் தலையீட்டுக்கு முற்றுப்பள்ளி வைப்பது எனும் பொலிவேரியின் புரட்சியின் ஆதரவாளர்தான்.

அல்பான்ஸோ கெனோ தலைமை தாங்கிய பார்க் கெரில்லா இயக்கத்தை உலகின் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்குமாறு ஐரோப்பிய நாடுகளை கியூபாவும் வெனிசுலாவும் கோரிய காலங்களும் இருந்தன. அதே வெனிசுலாவும் கியூபாவும் அதனோடு சேர்ந்து நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் கேப்ரியல் கார்சியா மார்க்வசும், பார்க்கின் மனித உரிமை மீறல்களைக் கைவிட்டு, ஆட்கடத்தில்களைக் கைவிட்டு, ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, வெகுமக்கள் அரசியலில் இணையுமாறு கோரிய காலங்களும் பின்னால் அமைந்தன. வுரலாறு நெடுகிலும் ஒடுக்குமறைக்கு உள்ளான மக்களின் இயக்கங்கள் சில வேளைகளில் நண்பர்களது ஆலோசனைகளைக் கேட்பதில்லை. ரஸ்யா, கியூபா, வியட்நாம் போன்று தமக்குப் பொருளியல், ராணுவ உதவிகள் அளித்த சக்திகள் அந்நிலைமையிலிருந்து வெளியேறிவிட்டன எனும் யதார்த்தத்தையும் பார்க் கெரில்லா அமைப்பினால் இன்னும் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

அல்பான்ஸோ கெனோ, ஐரோப்பிய-அமெரிக்க ஊடகங்களால் இன்னொரு பயங்கரவாதி எனச் சித்தரிக்கப்படுகிறார். போதைக் கடத்தில் வியாபாரி எனச் சித்தரிக்கப்படுகிறார். அவர் தலைமை தாங்கிய இயக்கம் ஒரு போதைக் கடத்தல் இயக்கம் என்கிற மாதிரி, ஆட்களைக் கடத்திக் காசு கேட்கும் இயக்கம் என்கிற மாதிரியான சித்திரத்தைத் தர முயல்கி;றார்கள். அல்பான்ஸோ தலைமை தாங்கிய பார்க் கெரில்லா அமைப்பை எவ்வாறு சித்தரித்தாலும், அல்பான்ஸோ பற்றிய ஒரு அவமானகரமான சித்திரத்தை முழுமையாக அவர்களால் கட்டியமைக்க முடியவில்லை. பார்க் அமைப்பின் பிற தலைவர்கள் பாலங்களைத் தகர்ப்பது குறித்து விவாதித்துக் கொண்டிருக்கும்போது புத்தகங்களில் ஆழந்திருக்கும், புத்தகப்புழுவாகின கோட்பாட்டாளர் அல்பான்ஸோ கெனோ என்றுதான் அவரைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது. பல்கலைக் கழகத்தில் மானுடவியல் கற்றவர், மாணவர் போராட்டங்களில் ஈடுபட்ட, கியூபப் புரட்சியால் ஆகர்ஷிக்கப்பட்ட, நிலமற்ற வறிய கிராமப்புற கொலம்பிய விவசாயிகளின் நலன்களுக்காகப் போராடத் தமது வாழ்வை அர்ப்பணித்த ஒரு கடும்போக்குள்ள மார்க்சிய-லெனினியர் அவர் என்றுதான் உச்சபட்சமாகச் சொல்ல முடிகிறது.

உலகின் பகாசுர ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிற மாதிரி போதைக் கடத்தல் இயக்கம், அதனோடு பயங்கரவாத இயக்கம் தானா பார்க் கெரில்லா அமைப்பு? நிகரகுவாவின் ஸான்டினிஸ்டா இயக்கம் போல, எல் ஸால்வடார் கெரில்லா இயக்கம் போல, பெருவின் சைனிங் பாத் கெரில்லா இயக்கம் போல, சே குவேரா கட்டியமைத்த பொலிவிய கெரில்லா இயக்கம் போல, அல்பான்ஷோ தலைமை தாங்கிய கொலம்பிய பார்க் கெரில்லா இயக்கத்திற்கென தோற்றக் காரணங்கள், கோட்பாடுகள், கொள்கைள் என ஒன்றும் இல்லையா? எந்தவிதமான ஒடுக்குமுறைச் சமூகப் பொளுளாதாரக் காரணங்களும் இல்லாமல் தான் பயங்கரவாத இயக்கமாக பார்க் கெரில்லா அமைப்பு தோன்றியதா? இப்படியான கேள்விகளுக்கான விடைகள் எதனையும் பகாசுர ஊடகங்களின் பகுப்பாய்வுக் கட்டுரைகளிலோ அல்லது அல்பான்ஸோ கெனோவின் கொலை குறித்த செய்திகளிலோ நாம் துப்புரவாகப் பார்க்கவே முடியாது.

உலகின் புகழ்வாய்ந்த இடதுசாரிப் பதிப்பகமான ஜெட் புக்ஸ் கிளர்ச்சி இயக்கங்கள் எனும் வரிசையில் மூன்று புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறது. அல்கைதா, ஜெபடிஸ்டா மற்றும் பார்க் போன்ற இயக்கங்களின் தோற்றம் கொள்கைகள் அதனது திட்டங்கள் மற்றும் எதிர்காலம் குறித்து ஆய்வுகள் இந்நூல்கள். கனடிய அரசியல் விரிவுரையாளரும் சுயாதீனப் பத்திரிக்கையாளரும், கொலம்பிய அரசியல் குறித்த ஆய்வாளருமான கேரி லீச் பார்க் கெரில்லா இயக்கம் குறித்து எழுதிய பார்க் : மிகநீண்ட ஆயுத எழுச்சி (Farc - The Longest Insurgency : Garry Leech :192 Pages : Zed Books : May 2011) எனும் நூல் பகாசுர ஊடகங்கள் எதிலும் நாம் பார்க்க முடியாத தரவுகளுடன், பார்க் இயக்கத்தின் தோற்றக் காரணங்களையும், அவர்களது அரசியல் நடைமுறைகளையும், அவர்களது தவறுகளையும் விமர்சனக் கண்ணோட்டத்தில் முன்வைத்திருக்கிறது.

கொலம்பிய கம்யூனிஸ்ட் கட்சி அதனது ஆயுதப்பிரிவான கொலம்பியப் புரட்சிகர ஆயதப்படை என அழைக்கப் பெறும் பார்க் கிராமிய கெரில்லா அமைப்பின் தோற்றத்தையும், எம்-19 மற்றும் இஎன்எல் போன்ற பிற மார்க்சிஸ்ட் நகர்ப்புற கெரில்லா இயக்கங்களின் தோற்றத்தினையும் வரலாற்று அடிப்படையிலும் அதனது அரசியல் பண்பின் அடிப்படையிலும் இருவிதமாகப் பிரிக்கிறார் கேரி லீச். பார்க் அமைப்பு கியூபப் புரட்சிக்கு முன்பான, கொலம்பிய வரலாற்றில் வன்முறைக் காலம் - லா வயலன்ஸ் - என அழைக்கப்பெறும் 1948-1958 காலகட்ட விவசாயிகளின் தற்காப்புக் குழக்களின் மரபில் வந்த, 1964 ஆம் ஆண்டு கொலம்பியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுதப்பிரிவாகத் தோன்றிய பார்க் பின்னாளில் முழுமையாக கிராமிய-மலைப்புற நிலமற்ற விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட கெரில்லா அமைப்பாகப் பரிமாணம் பெற்றது என்கிறார். பிற அமைப்புக்கள் கியூபப் புரட்சியினால் ஆதர்ஷம் பெற்ற, சே குவேராவின் போகோ தியரியினை ஏற்ற நகர்ப்புற கெரில்லா இயக்கங்கள் என்கிறார்.

1948-காலகட்டங்கள் என்பது, தாராளவாதிகள்-கம்யூனிஸ்ட்டுகள் ஒரு புறமும், பழமைவாதிகள் ஒரு புறமும் இருக்க கொலம்பிய வரலாறு கொலைக்களமாகின காலம். பழமைவாதிகள் இந்தப் பத்து ஆண்டுகளில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளையும் கம்யூனிஸ்ட்டுக்களையும் தாராளவாதிகளையும் கொலை செய்தார்கள். நிலவுடைமையாளர்களிடமிருந்து தப்புவதற்காக இந்தக் காலகட்டத்தில் நிலமற்ற விவசாயிகள் தற்காப்புக் குழுக்களை அமைத்துக் கொண்டார்கள். தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்கள் குழுவடிவிலான தமக்கான குடியரசு சமூகத்தை அமைத்துக்கொண்டு அடர்ந்த காடுகளுக்குள் நகர்ந்தார்கள். இந்த தற்காப்புக் குழுக்களும், குடியரசு சமூகக் கிராமங்களும்தான் இன்றளவிலும் பார்க் அமைப்பின் அடிப்படைக் கட்டுமானங்களாகவும் மக்கள் ஆதவுரக் கட்டமைப்பாகவும் இருக்கின்றன.

இந்த வன்முறைக் காலத்தின் பின்பு தமக்குள் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்த கம்யூனிஸ்ட்டுகள் அல்லாத தாராளவாதிகளும், நிலவுடைமையாளர்களான பழமைவாதிகளும் தமக்குள் ஒரு ஆட்சியமைப்புப் புரிதலுக்கு வந்தார்கள். துலா 4 வருடங்கள் தலைமையேற்று ஆள்வது, பதவிகளைச் சரிசமமாகப் பிரித்துக் கொள்வது அந்த ஏற்பாடு. இதனை தேசிய முன்னணி அரசியல் ஏற்பாடு எனவும் வகுத்துக் கொண்டார்கள். 1974 வரையிலும் கொலம்பியாவில் இந்த அரசியல் அமைப்பு முறையே நிலவியது.

அப்போது கொலம்பிய மக்கள்தொகையில் 7.5 சதவீதமானவர்களிடமே கொலம்பியாவின் 70 சதவீதமான நிலங்கள் இருந்தது. இந்த நிலங்களில் பெரும்பாலமானவை சிறு விவசாயிகளிடமிருந்து ஆக்கரமிக்கப்பட்டதாகவும் இருந்தது. நிலச்சீர்திருத்தம். சமூக உத்திரவாதம், மருத்துவ நலம், கல்வி போன்றவற்றுக்காக விவசாயிகள் தொடர்ந்து போராடத் துவங்கினார்கள். நிலத்தையும் அரசியல் அதிகாரத்தையும் கொண்டிருப்பவர்கள் நிலச்சீர்;திருத்தம், விவசாயிகளின்; மறறும் தொழிலாளர் நலன்களைப் பேசினாலும், தமது வர்க்க நலன்களின் பொருட்டு மார்க்சிஸ்ட் கெரில்லா இயக்கங்களை ஒடுக்குவதையே வழமையான கொள்கையாகக் கொண்டிருந்தார்கள். நாலரைக் கோடி மக்கள் தொகை கொண்ட கொலம்பியாவில் 60 சதவீதமானவர்கள் வறுமைநிலைக்கும் கீழே தள்ளப்பட்டார்கள். கியூபப் புரட்சியினாலும், சோவியத் யூனியானலும் ஆதர்ஷம் பெற்ற கம்யூனிஸ்ட்டுளையும் கெரில்லாக்களையும் அழிப்பதற்காக அமெரிக்கா ராணுவ உதவிகளை கொலம்பிய அரசுக்கு வழங்கி வந்தது.

கெரில்லாக்களை அழிப்பது அதனோடு கோகோ கடத்தலை அழிப்பது எனும் இரண்டு நோக்கங்களை அமெரி;க்கா கொலம்பியாவுக்கு ராணுவத்துக்கென ராணுப் பயற்சியையும் பொருளதவியையும் கொட்டிக்கொடுத்தது.

கோக்கோ வளர்ப்பும் போதைப் பொருள் கடத்தலும் எவ்வாறு கொலம்பியாவின் சமூக யதார்த்தமாக ஆகியது? கோகோ வளர்ப்பும் கடத்தலும் பாரம்பர்யமாகவே கொலம்பிய நிலவுடமையாளர்களின் வியாபாரமாக இருந்து வந்திருக்கிறது. அதன்வழி அவரவர்க்கான தனித்தனி சாம்ராஜ்யங்களையும் அவர்கள் கட்டி வளர்த்து வந்திருக்கிறார்கள். 1948-1958 காலங்களில் தமது விவசாய நிலங்களில் இருந்து துரத்தபட்டு அடர்ந்த கானகங்களுக்கு இடம்பெயர்ந்த விவசாயிகளும் தங்களது ஜீவனத்துக்கு வேறு ஏற்பாடுகள் இல்லாத நிலைமையில் அவர்களும் தாம் இடம்பெயர்;ந்த மலைகளில் கோகோ பயிரிடத்துவங்கினார்கள். இவ்வாறு கோகோ உற்பத்தியில் பாரம்பர்யமான நிலக்கிழார்களும், இடம்பெயர்ந்த விவசாயிகளும் கோகோ உற்பத்தி செய்ய, அதற்கான சந்தையும் விநியோகமும் என்பது பரவ, அது உலகின் பிரச்சினையாகவும் ஆகியது.

ஓரு புறம் நிலக்கிழார்களினதும், கார்ப்பரேட் மூலதனங்களினதும் நலன் காக்கும் அரசு, பிறிதொரு புறம் கோகோ வியாபாரத்தையும், மார்க்சிஸ்ட் கெரில்லாக்களையும் அழிக்க நினைத்த அமெரி;க்கா, இதனிடையில் நிலவுடைமையாளர்களையும் கட்டுப்படுத்தி, விவசாயிகளின் உரிமைகளையும் நிலைநாட்டி, பரந்து பட்ட வறிய மக்களுக்கு சோசலிசத்தைக் கட்டியமைக்கும் திட்டத்துடன் பார்க் எனும் கெரில்லா அமைப்பு.

பார்க் கெரில்லா அமைப்புக்கும் கோகோ உற்பத்திக்கும் என்ன தொடர்பு? அவர்கள் எப்போதாவது கோ கோ உற்பத்தியிலோ அல்லது வியாபாரத்திலோ அல்லது விநியோகத்திலோ ஈடுபட்டிருக்கிறார்களா? அமெரி;க்க அரசின் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நிறுவனம் பார்க் கெரில்லா அமைப்பு இவற்றில் எதிலும் நேரடியிலாக ஈடுபடவில்லை அதற்கான சான்றுகளும் இல்லை எனத் தெரிவித்திருக்கிறது. பார்க் அமைப்பினர் தங்களது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிற பிரதேசங்களில் சிவில் நிர்வாகத்தையும், மேம்பாட்டுத்திட்டங்களையும், கல்வி மற்றும் சுகாதாரத்தையும் நிர்வகிப்பதற்கான வருவாயைப் பெறுவதற்கு வரிவிதிப்பு முறையைக் கொண்டிருக்கிறார்கள். நிலக்கிழார்களின் மீதும், ஜீவனத்துக்கு வழியில்லாது கோகோ பயிர்செய்யும் விவசாயிகளிடமும் அது வரிவசூலிக்கிறது.

இதன் போக்கில் நடைமுறையில் அது நிலக்கிழார்களிடம் எதிர்ப்பைப் பெற்றது. கோ கோ விற்பனையில் வரும் பெரும்தொகையில் நிலக்கிழார்கள் மறுபடியும் நிலங்களை வளைப்பதையும், நகர்ப்புறங்களில் சொத்துக்கள் வாங்குவதையும் பார்க் அமைப்பு எதிர்ப்பதால், இப்போது நிலக்கிழார்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள, பார்க் கெரில்லா இயக்கததிற்கு எதிராகவும், அதனை ஆதரிக்கும் விவசாயிகளுக்கு எதிராகவும் தமக்கான பாதுகாப்புப் படைகளை உருவாக்கத் துவங்கினார்கள். தமது பொது எதிரிகளான கெரில்லாக்களை அழிப்பதற்காக கொலம்பிய ராணுவம் இத்தகைய நிலக்கிழார்களின் பாதுகாப்புப் படையுடன் இணைந்து, அவர்களுக்கு ஆயதமும் பயிற்சியும் கொடுத்து கெரில்லாக்களையும் விவசாயிகளையும் கொன்று குவித்து வருகிறார்கள். இவர்களுக்கான ராணுவ உதவியையும் அமெரிக்கா கொடுத்து வருகிறது.

தம் பிரதேசத்திலுள்ள போதைப் பொருள் உற்பத்தியைத் தடை செய்ய விரும்பவதாக பார்க் கெரில்லா அமைப்பு பலமுறை அறிவித்திருக்கிறது. தமது கட்டுப்பாட்டிலிருக்கும் கிராமங்களின் வளர்ச்சிக்கும் நிர்வாகத்திற்கும் உலக அமைப்புக்களும் அரசுகளும் உதவினால் தாம் கோகோ தயாரிப்பினை முற்றிலுமாகத் தடுப்போம் என்றார்கள் அவர்கள். அமெரி;க்காவோ உலக அமைப்புக்களோ அவர்களுக்கு அவர்கள் கேட்ட பொருளுதவிகளை எப்போதும் வழங்கவில்லை. மக்கள் தொகையில் பெரும்பாலுமானவர்களான அடிப்படையான நிலமற்ற விவசாயிகளின் பிரச்சினையைப் பற்றிக் கவலைப்படாமல், அவர்களது உரிமைகளுக்கும் நலன்களுக்கும் போராடும் கெரில்லாக்களை அழிப்பதில் மட்டும்தான் கொலம்பியப் பழமைவாதிகளும் கார்ப்பரேட் தாராளவாதிகளும் அமெரிக்க ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகிறார்கள்.

அம்னஸ்டி இன்டர் நேஷனல், மனித உரிமைக் கண்கானிப்பகம் போன்றன சராசரியாக கொலம்பியாவில் ஒரு நாளில் 70 கொலைகள் நடப்தகைக் பதிவு செய்திருக்கிறார்கள். இதில் 70 சதவீதமான கொலைகளை அரச ஆதரவு நிலக்கிழார்களும் கோகோ உற்பத்தியாளர்களும்தான் செய்கிறார்கள். இவர்கள் கெரில்லாக்களை அழிப்பது எனும் பெயரில் இடதுசாரிகளையும் அறிவாளிகளையும் மனித உரிமையாளர்களையும் கொன்று வருகிறார்கள். வெறும் 17 சதவீதமான கொலைகளை கெரில்லாக்களும், பிறவற்றை அரச படையினரும் செய்கிறார்கள் என்கின்றன இந்த அமைப்புக்கள். கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகவும் இன்றும் கொலைகளையே அரசியலாகக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு, அதற்கு எதிராக 45 ஆண்டுகளாகப் போராடிவரும், வறிய விவசாயிகளதும் தொழிலாளர்களதும் கெரில்லா அமைப்பை வன்முறையாளர்களின் அமைப்பு என்கிறது. இந்தக் கொலம்பிய அரசுதான் அமெரிக்க ராணுவ உதவியுடன் அதனது தலைவரான அல்போன்ஷா கெனோவையும் நவம்பர் 4 ஆம் திகதி சுட்டுக் கொன்றிருக்கிறது .

1948 ஆம் அண்டு ஜூலை 22 ஆம் நாள் பிறந்த அல்போன்ஷா கெனோ, கொலம்பியத் தலைநகரான பொகாட்டோ பல்கலைக் கழகத்தில் 1970 ஆம் ஆண்டு மானுடவியல் மாணவராக இருந்த கெனொ, கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பில் உறுப்பினராகினார.; 1982 ஆம் ஆண்டு பார்க் அமைப்பில் இணைந்தார். ஏழு பேர் கொண்ட மத்தியக்குழவில் இணைத்துக் கொள்ளப்பட்டார். பார்க் அமைப்பின் முன்மைத்தலைவர் 1990 ஜேகோப் அரனாஸ் புற்றுநோயால் மரணமுற்றார். 2008 இல் பிறிதொரு மத்தியக்குழு உறுப்பினரான மானுவல் மருலாண்டா மாரடைப்பினால் மரணமுற்றார். 2008 ஆம் ஆண்டு பாரக் அமைப்பின் கோட்பாட்டாளர் ராவுல் ரயாஸ் ஈக்வடார் நாட்டினுள் கொலம்பிய ராணுவம் நிகழ்த்திய தாக்குதலில் கொல்லப்படடார். 2008 இல் பிறிதொ தலைவரான இவான் ரியோஸ் கொலம்பிய அரசின் டாலர்களுக்கு ஆசைப்பட்ட தனது சொந்தப் பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 2010 ஆம்ஆண்டு மோனோ ஜெஜோய் எனும் பிறிதொரு மத்தியக்; குழு உறுப்பினர் கொலம்பிய ராணுவ வேட்டையில் கொல்லப்பட்டார். மிஞ்சிய இரு மத்தியக் குழு உறுப்பினர்களில் ஒருவரும், பார்க் அமைப்பின் முதன்மைத் தலைவருமான அல்போன்ஸா கெனோ நவம்பர் 4 ஆம் திகதி கொலம்பிய ராணுவம் நடத்திய வேட்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆல்பான்ஸோ கொல்லப்பட்டதற்கு இலத்தீனமெரிக்க நாடுகள் எதுவும் முன்வந்து கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆநேகமாக பாரக் கெரில்லா இயக்கம் பாரம்பர்ய இலத்தீனமெரிக்கப் புரட்சியாளர்களால் தனிமைப்படுத்தப்பட்ட நிலைமையில்தான் அல்பான்ஸோ கெனோ சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் சொல்லலாம்.

கொலம்பிய நிலப்பரப்பின் பாதியையுயும், அதனது 12,000 நகராட்சிகளில் 6,000 க்கும் மேற்பட்ட நகராட்சிகளையும் தன் நிர்வாகத்தின் கொண்டிருந்த, இன்றும் 18,000 போராளிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிற பார்க் கெரில்லா அமைப்பு இத்தகைய தலமைத்துவ அழிப்புக்கு ஆளாகவேண்டிய காரணம் என்ன? கொலம்பிய இடதுசாரி அறிவுஜீவிகளிடமிருந்தும், அதனது பாரம்பர்ய ஆதரவாளரான வெனிசுலா ஜனாதிபதி யூகோ சேவாஸ் போன்றோரிடமிருந்தும் கூட பார்க் கெரில்லா அமைப்பு அந்நியமாக நேர்ந்த சூழல் எவ்வாறு வந்தது? பார்க் கெரில்லா இயக்கத்தின் வரலாற்றில் அது விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டிய பிறிதொரு அத்தியாயம்

No comments:

Post a Comment