Wednesday, November 16, 2011

தமிழக காங். தலைவராக ஞானதேசிகன் பதவியேற்பு!

Wednesday, November 16, 2011
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக ஞானதேசிகன் எம்.பி. பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தங்கபாலு ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய தலைவராக ஞானதேசிகன் எம்.பி.யை நியமித்து கட்சித் தலைமை கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது. புதிய தலைவர் ஞானதேசிகன் இன்று பகல் 1.30 மணிக்கு சத்தியமூர்த்திபவனில் பதவி ஏற்றார்.

முன்னதாக காலை 10.30 மணிக்கு ஜிம்கானா கிளப் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு ஞானதேசிகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்றிருந்தனர். பின்னர் வால்டாக்ஸ் சாலையில் உள்ள இந்திரா காந்தி, துறைமுகம் வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர், மெரினாவில் உள்ள மகாத்மா காந்தி, வ.உ.சிதம்பரனார், சிவாஜி, சின்னமலையில் உள்ள ராஜீவ் காந்தி, நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் உள்ள மூப்பனார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், தமிழக காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் எஸ்.டி.நெடுஞ்செழியன், ஐஸ்வர்யா நெடுஞ்செழியன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் மலையூர் வி.புருஷோத்தமன், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் சிரஞ்சீவி, துறைமுகம் ரவி, கோல்டன் ரஃபி, சதீஷ்குமார், ராயபுரம் மனோ, வெங்கட், ஜவஹர்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பகல் 1.20 மணிக்கு ஞானதேசிகன், சத்தியமூர்த்திபவனுக்கு வந்தார். பட்டாசு வெடித்து தொண்டர்கள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து மூத்த தலைவர்கள் முன்னிலையில் ஞானதேசிகன், தமிழக காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக தேசிய செயலாளர் ஜஹா கலந்து கொண்டார். கட்சியின் முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment